அரசுப் பள்ளியில் பூத்துக் குலுங்கும் காய் கனிகள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமன் ஊத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கொரோன காலகட்டத்தில் வைக்கப்பட்ட மரம் மற்றும் செடி கொடிகள் தற்போது பலன் தர தொடங்கியுள்ளன. ராமன் ஊத்தில் செயல்பட்டு…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமன் ஊத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கொரோன காலகட்டத்தில் வைக்கப்பட்ட மரம் மற்றும் செடி கொடிகள் தற்போது பலன் தர தொடங்கியுள்ளன.
ராமன் ஊத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் இப்ராஹிம். இப்பள்ளியில் 15 க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 18 ஆண்டுகளாக, அப்பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் இப்ராஹிம், மாணவர்களுக்குக் கல்வியை எளிதாக பயிற்றுவிக்கும் விதமும் மாணவ மாணவர்களுடன் தொடர்ந்து கனிவுடன் கலந்து கொண்டு பணியாற்றி வரும் செயலும் அப்பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்ராஹிம்  இப்பள்ளிக்குப் பணியாற்ற வரும்போது, பள்ளியைச் சுற்றிலும் கருவேல மரங்கள் நிறைந்தும், புதர் மண்டியும் காணப்பட்டன. இதையடுத்து, அவரது முயற்சியால் அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று, பள்ளி வளாகத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல், கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கு மாணவ மாணவிகள் வராத போது, அங்கு பணியாற்றும் ஆசிரியருடன் இணைந்து, பள்ளியின் பின்புறம் மா, வாழை, கொய்யா, பப்பாளி உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகள் நட்டும், காய்கறி வகைகளான தக்காளி, பீர்க்கங்காய், மிளகாய் ,மரவள்ளி கிழங்கு முருங்கை, உள்ளிட்டவைகளையும் மூலிகைச் செடிகளான துளசி,பச்சிலை ,தூதுவளை, கண்டங்கத்திரி, மருதாணி உள்ளிட்ட மூலிகை செடிகளை வைத்தும் பராமரித்து வந்துள்ளார்.
இவ்வாறு அவர் பராமரித்து வந்த செடிகள் மற்றும் மரங்கள் இன்று பலன் கொடுக்கும் வகையில்  தற்போது பூத்துக் குலுங்குகின்றன. அதிலிருந்து கிடைக்கும் பழங்களையும் காய்கறிகளையும், அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உணவாகவும் பழமாகவும் கிடைக்குமாறு அவர் வழிவகை செய்துள்ளார்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.