மீன்கள் உள்ள நீர்நிலைகளில் சிறகுகள் நீரில் படும் அளவில் தாழப் பறந்து கொண்டே செல்லும் மீன்கொத்திப் பறவை அகப்பட்ட மீனைக் கொத்திக் கொண்டு இது வரை உறவாடிய நீரைச் சிறகினால் உதறிவிட்டு உயரப் பறந்து விடும். மீன் கிடைக்கும் வரை நீருடன் உறவாடிவிட்டு மீன் கிடைத்தவுடன் நீரை உதறிவிட்டுப் பறந்து விடும். அதே பறவை, குளத்தில் நீர் வறண்டுவிட்டால் அந்த திசையை எட்டியும் பார்க்காது.
ஒருவரால் காரியம் ஆகும் வரை ஒட்டி உறவாடி பயன்படுத்திவிட்டு பின்னர் எட்டிச்செல்லும் குணம் கொண்டவர்கள் எந்த இனத்திலும் உண்டு. இதைத்தான் தமிழ் மூதாட்டி அவ்வைப்பாட்டி ” அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்.” என்கிறாள். அதே குளம் கோடையில் வறண்டு விடுகிறது. நீர்வற்றி விட்டதால் பறவைகள் வருவதில்லை. இத்தகைய உறவு பாராட்டுதல் மனிதருக்கு அழகல்ல என்கிறார் ஒளவை பாட்டி.
இலக்கணம் பேசும் இந்த வரிகளை எளிய தமிழில் இயம்புகிறார் கவியரசர் கண்ணதாசன். “குளத்திலே தண்ணியில்லே,,, கொக்குமில்லே மீனுமில்லே” எனப்பாடும் கண்ணதாசன், ” பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா, பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ள சொந்தமில்லே” என ” யாரை நம்பி நான் பொறந்தேன்” என்ற திரைப்பாடலில் குறிப்பிடுகிறார்.
மூதுரை தந்த பொருளை “வாழும் போது வருகின்றான். வறுமை வந்தால் பிரிகின்றான்…” என்ற வரிகள் இடம்பெற்ற “ஒருவன் மனதில் ஒன்பதடா. அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா..” என்ற தர்மம் தலைகாக்கும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் குறிப்பிடுகிறார் கவியரசு.
வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்கி கூறும் அருமையான பாடல் வரிகளில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்..









