அரசுப் பள்ளியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை, கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லி, தலைமை ஆசிரியர் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறுதிசெய்யப்பட்ட 25-11-1949 அன்று “1950-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், முதல் குடியரசாகப் போகும் இந்தியாவில், அரசியல் ஜனநாயகம் மட்டும் இருக்கும்; சமூக சனநாயகம் இருக்காது; சமூக ஜனநாயகத்தை உருவாக்க வேண்டியது நம் கடமை” என்று எச்சரித்தார் டாக்டர் அம்பேத்கர். இத்தனை ஆண்டுகளைக் கடந்த பிறகும் சமூக ஜனநாயகம் ஏற்படவில்லை என்பதை சாதி ரீதியாக நடத்தப்படும் கொடூர சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே செங்கட்டான்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றும் சுகுமாரி என்பவர், பட்டியலினத்தைச் சேர்த்த 6 மாணவிகளைக் கழிவறைகளை சுத்தம் செய்யச்சொல்லி மிரட்டி வற்புறுத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்பு தகவல் அறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், சமத்துவத்தை போதிக்க வேண்டிய ஆசிரியரே சாதி ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டிருப்பது பெற்றோர்களிடையே அச்சத்தை அளிப்பதாக உள்ளது.
பட்டியலின மாணவிகளை கொடுமைப்படுத்திய தலைமை ஆசிரியை சுகுமாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, குழு அமைத்து ஆசிரியர்களைக் கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.








