முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

பெருமாள் முருகனின் வரிகளில் அம்பேத்கருக்கு கர்நாடக இசையில் T.M. கிருஷ்ணாவின் பாடல்!


எல்.ரேணுகாதேவி

கட்டுரையாளர்

சங்கீதம் அனைவருக்கும் சமம் என்ற கருத்தை வலியுறுத்தி நிகழ்கால கர்நாடக சங்கீத வரலாற்றில் பல முற்போக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர் மகாசேச விருதுபெற்ற புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி. எம்.கிருஷ்ணா.

மேடை கச்சேரிகளில் ஒரு பிரிவினர் மட்டுமே பாடி, கேட்டு வந்த கர்நாடக சங்கீதத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மார்கழி கச்சேரிகளுக்குப் பதில் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவை‘ முன்னெடுத்தவர்.

இந்து பக்தி பாடல்களே அதிகளவு பாடப்படும் கர்நாடக சங்கீதத்தில் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழா’, சென்னையில் உள்ள நீர்நிலைகளின் மாசு குறித்து ‘பொறம்போக்கு பாடல்’ அமைதியை வலியுறுத்தி தலையில் குல்லா அணிந்துகொண்டு கர்நாடக இசை மேடைகளில் இஸ்லாமியப் பாடல்களைப் பாடுவது, கேரள சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறியப் பாடுபட்ட கேரள மறுமலர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் நாராயண குரு குறித்த பாடல், சாமானியர்கள் பயணம் செய்யும் ரயில்களில் பாடல் பாடுவது எனத் தொடர்ச்சியாகப் பாட்டிலேயே முற்போக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார் டி.எம். கிருஷ்ணா.

இசைத் துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கேள்விகேட்கும் டி. எம்.கிருஷ்ணா மக்களை பாதிக்கும் அரசின் நடவடிககை குறித்தும் கேள்வியெழுப்ப தவறியதில்லை.

இதன்தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசை வரலாற்றில் முதல் முறையாக டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து டி.எம்.கிருஷ்ணா பாடிய பாடல் சமூக வலைத்தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கர்நாடக சங்கீதத்தில் அம்பேத்கர் குறித்து முதல் முறையாக பாடல் பாடியது மட்டுமல்லாமல், இனி தன்னுடைய எல்லா கச்சேரிகளிலும் இதே அம்பேத்கர் பாடல் பாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் இறுதி வரை போராடிய பாபாசாகேப் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளான நேற்று (ஏப்ரல் 14) கர்நாடக பாடகர் டி. எம். கிருஷ்ணா நேற்று மாலை அம்பேத்கர் குறித்த பாடலை பாடி வெளியிட்டார்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதி, டி. எம். கிருஷ்ணா காவடி சிந்து ராகத்தில் இசையமைத்துள்ளார். யூடியூப் வலைத்தளத்தில் அதிகளவு தேடிய பாடலாகவும் இந்த பாடல் உள்ளது. அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம் எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடலின் முதல் வரியை அம்பேத்கரின் அடையாள மொழியான ‘கற்பி ஒன்றுசேர், புரட்சி செய்’ என்பதை வைத்தேதொடங்குகிறது.

பாடல் வரிகள் பின்வருமாறு:

‘கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் என்றே
கருத்தை நெஞ்சில் விதைத்த வீரர் – போர்க்
களத்தில் நின்று விளைத்த சூரர்
அற்பச் சாதியை அழித்திட வந்தே
அறிவை ஊட்டிய அரிய தீரர் – எம்
அகத்தில் வாழ்கின் றசிங் காரர்

மாற்ற ஊற்று மதியில் நெருப்பு
மநுவைக் கொல்ல வந்த மழுவாம் – அவர்
மண்ணைப் பிளந்து தந்த கொழுவாம்
ஆற்றல் வேகம் அருளும் மேகம்
அனலின் சொற்கள் பிடித்து எழுவோம் – அவர்
அடியில் விழுந்து வணங்கித் தொழுவோம்

ஏற்றி வைத்து எம்மைக் காத்த
ஏந்தல் நாங்கள் பெற்ற சீராம் – ஏழை
எங்கள் அண்ணல் அவர்தான் யாராம்
போற்றிப் பாடித் துதிக்க வந்த
பாபா சாகேப் அம்பேத் காராம் – அது
போரா டென்று தூண்டும் பேராம்”


என முடிகிறது இப்பாடல்.

பாடலின் ஒவ்வொரு வரியும் அம்பேத்கர் கருத்துகளைப் பொதித்தும், சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களைய அவர் சொன்ன கருத்துகள், சமகாலத்தில் அம்பேத்கரின் தாக்கங்கள் போராடத் தூண்டும் கருவி என்பதை கர்நாடக இசையில் டி. எம். கிருஷ்ணா பாடுவது சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் சங்கீத சமத்துவத்தையும் கேட்பவர்கள் மனதில் இசையாய் விதைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Advertisement:

Related posts

ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!

பாசிட்டிவ் நடிகருக்கு கொரோனா பாசிட்டிவ்!

தேசிய திருநங்கைகள் தினம்; சென்னை, பரமக்குடியில் கொண்டாட்டம்!

Ezhilarasan