ஓ.பி.எஸ்.ஸின் இன்றைய நிலைக்கு அவர் தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் பதவிகாலம் முடிவடைய உள்ளதையடுத்து குடியரசு தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஏராளமான அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளர் திரௌபதி முர்முவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் குடியரசு தலைவராக வருவது பெருமைக்குரியது.
அதிமுகவைப் பொருத்தவரை பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழு எடுத்த முடிவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய நிலைக்கு அவர் தான் காரணம். நாங்கள் இல்லை. பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ். கட்டுப்பட்டிருந்தால், இன்று திரௌபதி முர்முவை தனியாக சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு ஓ.பி.எஸ். தான் முழு காரணம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாமா? ஓ.பன்னீர்செல்வத்துடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முடிவு எடுக்கப்படாத சூழலுக்கு ஓ.பி.எஸ்ஸே காரணம். ஒற்றைத் தலைமையே அதிமுக தொண்டனின் விருப்பம்.
மகாராஷ்டிரா போல் தமிழ்நாட்டிலும் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்படும். அதற்கு செந்தில்பாலாஜியும், சேகர்பாபுவுமே போதும். தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே யார் என்று ஸ்டாலினை தான் கேட்க வேண்டும். செந்தில் பாலாஜி என்ன பிரம்மாண்டத்தை ஏற்படுத்தப்போகிறார் என்று தெரியவில்லை என்று கூறினார்.








