திறமை உள்ளவர்களை தேடி வேலைவாய்ப்பு வரும்- டிஜிபி சைலேந்திர பாபு

காவல் துறையில் 10 ஆயிரம் பேர் கிராமங்களில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.  மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் காவல்துறை குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட…

காவல் துறையில் 10 ஆயிரம் பேர் கிராமங்களில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். 

மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் காவல்துறை குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை தமிழக காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு வழங்கினார். தொடர்ந்து அவர்கள் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பேசுகையில், பிளஸ் 2 முடித்தவர்கள் என்ன தொழில் செய்ய போகிறோம். அடுத்து என்ன படிக்க போகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. காவல்துறையில் சேர்ந்ததால் எங்கள் வாழ்க்கையே அது தான். நான் யார் என்பதை மாணவர்கள் உங்களுக்குள்ளே கேட்டு கொள்ள வேண்டும்.

காவல்துறை குடும்பங்களை சேர்ந்த வேலையில்லாத 5 ஆயிரம் பேரில் 1000 பேருக்கு தனியார் துறையில் வேலை வாங்கி கொடுத்துள்ளோம். மாணவர்கள் ஒரு போர் வீரனாக எதிரியின் பலம் பலவீனம் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஐடி என எந்த தேர்வாக இருந்தாலும் சண்டை தான். பலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்வாக முடியும். அவரவர் திறமைகளை சோதித்து பார்த்து திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். உலகத்தில் நிறைய பணிகள் உள்ளது.  மருத்துவர், என்ஜினியர், ஆசிரியர் என இன்னும் நிறையபணிகள் உள்ளன.

தமிழகத்தில் படித்த நிறைய பேர் உள்ள போது, டெல்லி மும்பையில் இருந்து வேலைக்கு
ஆட்களை அழைத்து வருகின்றனர். திறமைகள் உள்ளவர்களுக்கு தான் வேலை கிடைக்கும். திறமை உள்ளவர்களை தேடி வேலைவாய்ப்பு தானாக வரும். சில வழக்கறிஞர்கள் 1 மணி நேரத்திற்கு 10 லட்சம் சம்பளம் வாங்குகின்றனர். மூத்த வழக்கறிஞர்கள் வாதாட பல லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்று காவல்துறையில் கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். ஏழ்மையான குடும்பங்களில் இருந்து தான் அதிக காவலர்கள் வருகின்றனர். காவல்துறை கேள்வித்தாள்களை தற்போது பார்த்தால் நானே தேர்வாக மாட்டேன் என்பது போல உள்ளது. அவ்வளவு போட்டியும், கடினமான கேள்வித்தாளும் உள்ளது.

நாள்தோறும் நாளிதழ்களை படித்து உலக நிகழ்வுகளை தெரிந்து கொண்டாலே ஐஏஎஸ் ஆகி விடலாம். சிந்திக்க வேண்டும். தற்போது தகவல் உள்ளவருக்கு தான் மரியாதை உள்ளது. தகவல் இருந்தால் பலகோடி ரூபாய் சம்பாதிக்கலாம். அதற்கு புத்தகங்களை படிக்க வேண்டும். புதுமையான விஷயங்களை யோசிக்க வேண்டும். எந்த விஷயத்திலும் ஆர்வம் வேண்டும். தொடர்பு திறனை வளர்க்க வேண்டும். சிந்தனை, புதுமை, ஆர்வம், தொடர்பு திறன் இருந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்று கூறினார்.

மேலும், ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தால் மட்டுமே பெரிய நிறுவனங்கள் வேலை கொடுக்கும். நிறைய பேர் தமிழில் தேர்ச்சியடையாமல் போக வாசிப்பு பழக்கம் குறைந்ததே காரணம். அதனால் நல்ல நூல்களை, நாளிதழ்களை தினமும் படிக்க வேண்டும். நாங்கள் படிக்கும் போது சிறைச்சாலை போல் இருந்த கல்லூரி தற்போது நல்ல சூழலில் உள்ளன. மதுரை வேளாண்மை கல்லூரியில் படித்த 120 பேர் ஐஎஏஸ், ஐபிஎஸ் ஆக உள்ளனர். இந்திய அரசாங்கம் தலைமை தாங்க வைக்கவே ஐஎஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் பணி என்பது தலைமை தாங்கும் பணி. மதுரையில் படித்த இளைஞர் சுந்தர்பிச்சை கூகுள் நிறுவன சிஇஓவாக உள்ளார் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.