காதலன் மறைவை தாங்க முடியாமல் 3 பக்க கடிதம் எழுதிவிட்டு காதலன் வீட்டில் காதலி தூக்கு போட்டுஉயிரிழப்பு செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பழையசிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை மகள் சுதா (24). இவர் கள்ளக்குறிச்சி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து முடித்துள்ளார். ரிஷிவந்தியம் அடுத்த நூரோலை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ஆகாஷ் என்பவரும் சுதாவும் சித்தேரிபட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலன் ஆகாஷ் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அதன்பின் சுதாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதனை அறிந்த சுதா அதில் விருப்பம் இல்லாததால் சமூக நல அலுவலரிடம் தகவல் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
அதையடுத்து சிறிது நாட்கள் பெண்கள் தங்கும் விடுதியில் இருந்துள்ளார். பின்பு சமூக நல அலுவலரிடம் காதலன் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். அதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு காதலன் வீடான நூரோலை கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த சுதா மனமுடைந்து கடந்த 17 ம் தூக்கிட்டு உயிரிழப்புக்கு முயற்சித்துள்ளார். அதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சுதா உயிரிழந்தார். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சுதா எழுதிய 3 பக்க கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சுதா எழுதிய கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என்னால என் மாமா இல்லாத லைஃப் நினைக்க முடியல, அவனோட இடத்தை யாருக்கும் கொடுக்க முடியல, அவன் கூட வாழ்க்கையை மறக்க முடியல. அவன் தான் என்னோட வாழ்க்கை. எனக்கு கடைசி வரைக்கும் என் புருஷன் அவன் மட்டும் தான். உன் கூட இருந்த வாழ்க்கையை என்னால யார் கூட ஷேர் பண்ண முடியாது.
நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேணாம். நீ மட்டும் தான் என்னோட உலகம் நீ இந்த உலகத்தை இல்லாம நான் எதுக்கு இருக்கணும்.மேலும், அப்பா, அம்மா, தம்பி, பாப்பா எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க என்னோட மாமா இல்லாமல் வாய புடிக்கல என்னை என் மாமா கூடவே அடக்கம் பண்ணுங்க ப்ளீஸ் அப்பா அவன் கூட வாழத்தான் முடியல ஒன்னா அடக்கம் பண்ணுங்க அவன் கூட வாழ்ந்தது, பேசினது, பழகினது எதையும் மறைக்க முடியல வேற ஒருத்தரோட ஷேர் பண்ண முடியல மன்னிச்சிடுங்க எல்லாரும் ப்ளீஸ்”, உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கடிதத்தில் எழுதி உள்ளார்.








