முக்கியச் செய்திகள் இந்தியா

காலநிலை மாற்றம் குறித்து ஹர்னாஸ் சந்து கருத்து; அழகுசாதன சந்தையின் அடுத்த இலக்கு?

காலநிலை மாற்றம் குறித்த ஹர்னாஸ் சந்துவின் கருத்துக்கு, எழுத்தாளர் நக்கீரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ்’ 70-ஆம் ஆண்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து அப்பட்டத்தை வென்றுள்ளார். இஸ்ரேலின் எய்லட் நகரில் இந்தப் போட்டி நடந்தது. இதில் 80 உலக நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஹர்னாஸிடம், புவி வெப்பமாதல் குறித்தும் காலநிலை மாற்றம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. கால நிலை மாற்றத்தை இன்னும் பலர் ஏற்க மறுப்பது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘இயற்கை பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாவதைப் பார்த்து என் மனம் வெம்புகிறது. நம் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் தான் இயற்கை கஷ்டப்படுகிறது. நாம் பேசுவதை குறைத்துவிட்டுச் செயலில் இறங்க வேண்டும். நம் ஒவ்வொரு செயலும் ஒன்று இயற்கையை கொன்றுவிடும் அல்லது அதைக் காப்பாற்றும்’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், எழுத்தாளர் நக்கீரன், ஹர்னாஸ் சந்துவின் கருத்துக்கு மாற்றுக்கருத்தையும் சில கேள்விகளையும் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், புதிய ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஹர்னாஸ் சந்து, ‘காலநிலை மாற்றம்’ குறித்துப் பேசியதைக் கேட்டதும் புல்லரித்துவிட்டது. முன்பெல்லாம் இந்த அழகிகள் அன்னை தெரசாவைப் போல சேவை செய்ய விரும்புவார்கள். இப்போது அந்த ட்ரெண்ட் காலாவதியாகிவிட்டது. ‘காலநிலை மாற்றம்’ தான் புது ட்ரெண்ட் போலும்.

இந்தியாவில் சந்தைப் பொருளாதாரம் அறிமுகமான 1990-களுக்கு பிறகே, இங்கு வரிசையாக ஆறு உலக மற்றும் பிரபஞ்ச அழகிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். விளைவாக, பெரு நகரங்களில் மட்டுமே இருந்த அழகு நிலையங்கள் ஊர்புறங்களில்கூட தெருவுக்கு நான்கு முளைக்க, அழகுசாதனப் பொருட்களின் சந்தை மதிப்பும் 1000 கோடி ரூபாயைத் தாண்டியது. 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய ஒன்றியத்தில் அழகிகளே பிறக்கவில்லை. இப்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓர் உலக அழகி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இனியும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படலாம். காரணம், ஒற்றை இலக்க வளர்ச்சியில் இருக்கும் இந்திய ஒன்றியத்தின் அழகுசாதன சந்தையை இரட்டை இலக்கமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மனிதரால் உருவாக்கப்படும் கரிம வெளியீட்டில் ஆண்டுக்கு 2-4 விழுக்காட்டுப் பங்குக்கு, இவர் சார்ந்திருக்கும் அழகுசாதன பொருட்களின் சந்தைதான் காரணம் என்பதை தன்னை ஒரு சூழலியல் ஆர்வலராகக் கூறிக்கொள்ளும் ஹர்னாஸ் சந்து அறிந்திருக்க மாட்டாரா என்ன? இது உலகின் ஒராண்டு விமான போக்குவரத்தின் கரிம வெளியீட்டைவிட அதிகம் என்பதும் அவருக்குத் தெரியாதா?

இனி அடுத்த ஓராண்டுக்கு இவர் அழகுபொருட்களின் சந்தை வளர்ச்சிக்காக நிறுவனங்களால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவார். அதன் விளைவால் காலநிலை மாற்றத்துக்குக் காரணியான கரிம வெளியீடும் அதிகரிக்கப் போகிறது. இத்துடன் விமானத்தில் தொடர்ச்சியாக பறக்கப் போகும் இவரது தனிநபர் கரிம வெளியீட்டின் அளவு அதிகரிக்கப் போவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்பதையும் கொஞ்சம் சொன்னால் பரவாயில்லை.

காலநிலை மாற்றம் என்ற சொல்லை ரொமாண்டிசைஸ் செய்து நீர்க்கச் செய்வதும் ஒருவகை தந்திரம்தான். சந்தைப் பொருளாதாரமே காலநிலை மாற்றத்துக்கு மூலக் காரணம். அத்தகைய சந்தைப் பொருளாதாரத்துக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்டுள்ள ஒருவர் காலநிலை மாற்றம் குறித்து பேசுவதைக் கேட்டு நமக்குப் புல்லரித்தால், அவர்களுக்கு நமது வடிவேலுதான் நினைவுக்கு வருவார். “இவனுங்க இன்னுமா நம்மளை நம்புறாங்க.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பார்டி!

Ezhilarasan

வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

Jeba Arul Robinson

திமுகவில் சேருகிறாரா குஷ்பு?

Halley Karthik