நத்தம் அருகே குடும்பத்துடன் ஊருக்கு வந்தவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்த போலீசார் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடியை சேர்ந்தவர் ராமன்(52). ஓட்டுனரான இவர் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இரண்டு வருடத்திற்கு முன் சாத்தாம்பாடி பகுதியை சேர்ந்த அம்பலம் மகன் ராஜேஷ்(35) என்பவரிடம் இவர் ரூ.1 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கான வட்டியும் முறையாக மாதம், மாதம் செலுத்தி வந்துள்ளார். ஆனால் கடந்த கொரோனா காலத்தில் வேலையின்மை காரணமாக,
வட்டி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வாங்கிய கடனின் வட்டி, முதலைவிட அதிகமானதால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராமன் மகன் ஜோதிமணி, அவரது மனைவி சுமதி இருவரும் சாத்தாம்பாடியிலுள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்த அம்பலம் குடும்பத்தினர், வட்டியும் அசலையும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்றுகூறி, நிகழ்ச்சியில் இருந்தவர்களையும் அழைத்து வந்து, ஊர் மையப்பகுதியில் உள்ள மந்தையில் வைத்து, சுமதியை கம்பத்திலும் ஜோதிமணியை மரத்திலும் கட்டி வைத்து கன்னத்தில் கடுமையாக தாக்கி உள்ளனர்.

மாலை 6 மணிக்கு கட்டி வைதக்கப்பட்ட அவர்களுக்கு இரவு 11 மணி வரை தண்ணீர்கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராமனின் மகன் ஜோதிமணி(28) அளித்த புகாரின்கீழ், அம்பலம் குடும்பத்தினர் மூவரின் மீது கந்து வட்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளான அம்பலம், சாந்தியை வலை வீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நவீன காலத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன் மனைவி இருவரும் மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.







