“மொரப்பூர் – இராணிமூக்கனூர் ரயில் பாதை அமைக்க டெண்டர் கோரப்பட்டதில் மகிழ்ச்சி” – அன்புமணி

மொரப்பூர் – இராணிமூக்கனூர் ரயில் பாதை அமைக்க டெண்டர் கோரப்பட்டதில் மகிழ்ச்சியளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மொரப்பூர் – இராணிமூக்கனூர் ரயில் பாதை அமைக்க டெண்டர் கோரப்பட்டதில் மகிழ்ச்சி: தருமபுரி வரை பணிகளை நீட்டிக்க நிலம் எடுத்துத் தர வேண்டும்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தருமபுரி – மொரப்பூர் இடையே 38 கி.மீ நீளத்திற்கு புதிய தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மொரப்பூர் முதல் இராணி மூக்கனூர் வரை 10.221 கி.மீ தொலைவுக்கு புதிய பாதை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தொடர்வண்டித்துறை அமைச்சகம் கோரியுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 85 ஆண்டு கால கனவை நனவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

தருமபுரி – மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திட்டம் ஆகும். 2014&ஆம் ஆண்டு தருமபுரி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் நாடாளுமன்றத்திலும், அடுத்தடுத்து வந்த தொடர்வண்டித் துறை அமைச்சர்களிடமும் தொடர்ந்து பேசியதன் பயனாக 2016&17 ஆம் ஆண்டுக்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தை ரூ.358.95 கோடியில் செயல்படுத்தவும் தொடர்வண்டித்துறை அமைச்சகம் 06.02.2019 அன்று ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடர்ந்து 04.03.2019-ஆம் நாள் எனது முன்னிலையில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் 9 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இதுவரை தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாத நிலையில், அதன் ஒரு பகுதிக்கு இப்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.

மீதமுள்ள 28 கி.மீ தொலைவில் 8 கி.மீ நீள பாதையில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இத்திட்டத்திற்கு தேவையான 93.11 ஹெக்டேர் நிலங்களில் 46.79 நிலங்கள் கையகப்படுத்தித் தரபட்டுள்ளன. தனியார் பட்டா நிலங்களில் 26.19 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தான் அடுத்தக்கட்ட பணிகளை இன்னும் தொடங்க முடியாததற்கு காரணம் ஆகும்.

ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அந்த மாவட்டத்தின் தலைநகரம் மாநிலத் தலைநகருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் தருமபுரியை சென்னையுடன் இணைக்கத் தேவையான இந்தத் திட்டத்தை செயல்படுத்த வசதியாக அதற்கு தேவைப்படும் நிலங்களை போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.