தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ்.பாபு நீண்டகால சுவாசப் பாதிப்பு காரணமாக, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். முறையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் எங்களது பல்நோக்கு மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.
தொடர்ந்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக, இன்று பிற்பகல் 2:24 மணிக்கு காலமானார். இந்த நிலையில் வி. எஸ். பாபு மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் அர்லேகர் :
ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்:
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் – நண்பர்கள் – அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கனிமொழி எம்.பி.:
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தம் அளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




