யோகி பாபு நடித்து வெளியான மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில், கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான மண்டேலா திரைப்படத்தில், முடிதிருத்தும் தொழில் செய்யும் மருத்துவ சமுதாய மக்களை இழிவாக சித்தரித்துள்ளததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், அந்தத் திரைப்படத்தை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அதைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ், படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மண்டேலா படத்தை ஒளிபரப்ப, நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் பொதுநல வழக்கு தொடர இருப்பதாகவும் அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.







