பாலியல் தொல்லை கொடுத்த உடற்பயிற்சியாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேம்ப் ரோடு கிழக்குத் தாம்பரத்தில் அமைந்துள்ளது பாஸ்ட் ட்ராக் (Fast Track) என்னும் உடற்பயிற்சி கூடம். ஊரடங்கு விதிமுறைகளை மீறி இந்த உடற்பயிற்சி கூடத்தை பின்பக்கம் வழியாக திறந்துவைத்து பயிற்சி அளித்து வந்திருக்கிறார் அதன் உரிமையாளர் பிரேம் ஆனந்த். அப்பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடற்பயிற்சிக்காக சென்று வந்திருக்கிறார். சம்பவத்தன்று பயிற்சி முடிந்து அனைவரும் வீட்டிற்குச் சென்ற பிறகு, சிறப்பு பயிற்சி இருப்பதாகக் கூறி அந்த பெண்ணை மட்டும் அங்கே இருக்க வைத்துள்ளார் பிரேம் ஆனந்த். இதன்பிறகு உடற்பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் அந்த பெண்ணுக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுப்பதுபோல பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் சட்டென்று அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
இதனால், பயந்து போன பிரேம் ஆனந்த், அந்த பெண்ணை செல்போனில் தொடர்புகொண்டிருக்கிறார். அந்த ஆடியோதான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான் செய்தது தவறு என்னை மன்னித்து விடுங்கள்” என்றும் “நீங்கள் உடற்பயிற்சிக்கு கட்டிய பணத்தை திருப்பி தருகிறேன்” என்றும் மெல்லிய குரலில் பேசுகிறார் பிரேம் ஆனந்த். கொதித்தெழுந்த அந்த பெண், நீங்கள் செய்த தவறை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் உங்கள் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தேன் என்று கண் கலங்க பேசுகிறார்.
இது குறித்து ஆன்லைனில் புகார் வந்ததையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தகவலறிந்த உடற்பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் தலைமறைவானதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.







