பாலியல் புகாருக்கு உள்ளான சிவசங்கர் பாபா, உடல் நலக்குறைவு காரணமாக டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை டேராடூன் சென்றுள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது. அதனையடுத்து, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது மீன்று புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி கடந்த 13 ஆம் தேதி டி.ஜி.பி திரிபாதி உத்தவிட்டார்.
இந்நிலையில் மாணவிகள் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் எஸ்.பி விஜயகுமார் தலைமையில் விசாரணை அதிகாரிகளாக டி.எஸ்.பி குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் இருந்து வழக்கு தொடர்பான புகார், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று புகார் அளித்தவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களை பெற சி.பி.சி.ஐ.டியினர் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா தரப்பு, அவர் டேராடூன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என ஆதாரங்களை சமர்பித்துள்ள நிலையில், அவரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் டேராடூன் சென்றுள்ளனர். மேலும், அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க குற்ற வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.







