தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அளவினை ஆராய ஆணையம்!

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அளவினை ஆராய ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2020-21 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் 7.5 சதவிகிதம்…

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அளவினை ஆராய ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2020-21 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதேபோல பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்படிப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் எனவும், இந்த நிலை மாற்றப்பட வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் சென்றுள்ளன.

இதனைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தக் கோரிக்கைகளை தீர ஆராயவும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூக, பொருளாதார நிலை குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகளை கண்டறியவும் டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையமானது கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என்பதை ஆராயும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்வி படிப்புகளில் குறைந்த அளவில் இருந்தால் அதனை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைக்கும். ஆணையம் தனது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அளிக்கும் எனவும் அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.