குட்கா வழக்கு; தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் மீது வழக்குபதிவு செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான…

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் மீது வழக்குபதிவு செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய பல உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை , உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபி ஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர்.

அதன் பின்னர் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாது காப்புத் துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேரை சிபிஐ கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயை பல மாநிலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான 246 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

இந்த நிலையில் குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனடிப்படையில் வழக்குபதிவு செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது. குறிப்பாக உயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் அரசு தரப்பில் அனுமதி பெற்ற பின்பு தான் வழக்குபதிவு செய்ய முடியும் என்ற நடைமுறையின் அடிப்படையில் சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.