பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா: தலைவர்கள் புகழாரம்!

இன்று அக்.30 தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி பெருநிகழ்வினை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அன்னாரின் புகழைப் போற்றி வணங்குவதாக தெரிவித்துள்ளனர்.

சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் 1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பிறந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தீவிர ஆதரவாளராகவும், பார்வர்டு பிளாக் கட்சியின் முக்கியத் தலைவராகவும் விளங்கினார். தேசியம் மற்றும் தெய்வீகம் ஆகிய இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதியவர். 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தனது 55-வது வயதில் மறைந்தார். அவரது பிறந்தநாளும் மறைவு நாளும் ஒரே நாளில் வருவதால், ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையாகக் கொண்டாடப்படுகிறது. அன்னாரின் புகழைப் போற்றி பல்வேறு தலைவர்களும் தங்களது வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்தி வருகின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு விடுதலைக்காகப் போராடிய பசும்பொன் திருமகனார் பிறந்த நாள் இன்று. குற்றப்பரம்பரைச் சட்டம் – வாய்ப்பூட்டுச் சட்டம் போன்ற அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடியவர். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலே கழித்த தியாகத்துக்குச் சொந்தக்காரர். அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் – மக்கள் பிரதிநிதியாகவும் அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நேதாஜியுடன் இணைந்து ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் திருமகனாரின் பிறந்தநாளில், அவரது தியாகத்தை நினைவுகூர்வோம். காலனிய ஆட்சியால் உரிமைகள் பறிக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றுவோம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய நாட்டின் விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், அந்நியர்களால் பறிக்கப்பட்ட எளிய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடி அதில் வெற்றி கண்டவரும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என மக்கள் மன்றங்களில் சிறப்புறப் பங்காற்றியவரும், தேசத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றியதோடு, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சமூக ஒற்றுமையையும் சமத்துவத்தையும் நிலைநாட்டத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் தலைவருமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் ஜெயந்தி விழா இன்று!

அச்சமற்ற வாழ்வுக்கும், அயராத போராட்டத்திற்கும், உறுதியான கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்து, தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் அனைவரின் நினைவுகளிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும், தியாகங்களையும் என்றென்றும் போற்றி வணங்கிடுவோம்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அண்ணாமலை இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை தினம் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தலைவராகவும் விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

தன்னலமற்ற பொதுவாழ்வு, அஞ்சாத நெஞ்சம், உறுதியான கொள்கைப்பற்று, தெய்வ பக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.