சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் 1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பிறந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தீவிர ஆதரவாளராகவும், பார்வர்டு பிளாக் கட்சியின் முக்கியத் தலைவராகவும் விளங்கினார். தேசியம் மற்றும் தெய்வீகம் ஆகிய இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதியவர். 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தனது 55-வது வயதில் மறைந்தார். அவரது பிறந்தநாளும் மறைவு நாளும் ஒரே நாளில் வருவதால், ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையாகக் கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தேசப்பற்றையும், தெய்வீகத்தையும் வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு, தியாகத்தையும் நேர்மையையும் தனது வாழ்வியல் நெறியாகக் கொண்ட போற்றுதலுக்குரிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை பெருநாளில், அவருடைய பெரும் வாழ்வையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்.
தேவர்ஜெயந்தி மற்றும் குருபூஜை பெருநிகழ்வினை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் புண்ணிய மண்ணில் அமைந்துள்ள தெய்வத் திருமகனாரின் திருக்கோவிலுக்கு சென்று, அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 13.5 கிலோ தங்கக் கவசத்தால் தரிக்கப்பட்ட அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினேன்.
“மனிதனை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் அடிப்படையில் மதிக்க வேண்டுமே தவிர, வேறு எந்த அடிப்படையிலும் அல்ல” என்ற அவரது உயரிய சிந்தனை என்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டட்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




