தமிழ்நாட்டிற்கு விரைவில் ஜிஎஸ்டி இழப்பீடு-நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு அரசு கோரியுள்ள 2020-21ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ. 4,223 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிர்மலா…

தமிழ்நாடு அரசு கோரியுள்ள 2020-21ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ. 4,223 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்ததாவது: மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு கோரினால் அதற்கான சான்றுகளை அந்த மாநிலங்களில் பொது கணக்காளர் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தச் சான்று கிடைத்தவுடன் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க ஒப்புதல் வழங்கப்படும். ஜிஎஸ்டி இழப்பீட்டிற்கு பொது கணக்காளர் சான்றுகளை அளிப்பது கட்டாயம். மத்திய, மாநில அரசுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறை இதுவாகும்.

பொது கணக்காளர் சான்றளிப்பதில் தாமதம் ஏற்படும்பட்சத்தில், அது சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் கணக்காளர் இடையிலான பிரச்னையாகும். அதற்கு அவர்கள் தான் தீர்வு காண வேண்டும். பொது கணக்காளர்களின் சான்று கிடைக்காததால் சில மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது தாமதமாகியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் கேரள மாநிலம் அந்தச் சான்றை சமர்ப்பிக்கவில்லை.

2017-2018ஆம் ஆண்டுக்கான சான்றை தமிழக பொது கணக்காளர் சமர்ப்பித்ததையடுத்து, இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டது. அதேபோல, 2020-2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக தமிழகத்துக்கு சுமார் ரூ. 4,223 கோடி வழங்க வேண்டும் என்று பொது கணக்காளர் சான்றளித்துள்ளார். இழப்பீட்டுத் தொகை வழங்க விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்றார்.

மேலும், கடந்த ஆண்டு மே 31ஆம் தேதி வரை அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 86,912 கோடி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.