ஆளுநரின் செயல் சரியல்ல – டி.ஆர்.பாலு

அரசியல் சாசனம் குறித்து தெரியாத ஒருவர் தமிழக ஆளுநராக இருக்கிறார். அவரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் மற்றும்…

அரசியல் சாசனம் குறித்து தெரியாத ஒருவர் தமிழக ஆளுநராக இருக்கிறார். அவரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் அமளி தொடர்பாக தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லி கலைஞர் அறிவாலயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 142 நாட்கள் களித்து அதனை ஆளுநர் திரும்ப அனுப்பியுள்ளார். இது சரியான நடைமுறை அல்ல.

ஆனால், அனைத்து விதமான சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது என தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இதை ஆளுநர் கவனித்தாரா ? ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்துக்கு அதிகாரம், உரிமை கிடையாது என ஆளுநர் கூறுவது தவறானது.

மேலும், மத்திய அரசு ஆளுநரின் செயலை கண்டுகொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டவே கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மக்களுக்காக பொறுப்புள்ள அரசாங்கம் இயற்றிய சட்டத்தை ஆளுநர் நிராகரித்துள்ளார். எனவே, இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கோரினோம். ஆனால் சபாநாயகர், முதலில் ராணுவ அமைச்சரை பேச அனுமதித்தார். பின்னர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பேச அழைத்தார். ஆனால், ராணுவ அமைச்சர் பேசியதற்கு பதிலளிக்க எதிர்கட்சிகளை அனுமதிக்க வேண்டும் என கோரினோம் ஆனால் எதிர்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதையும் படிக்க: +2 பொதுத் தேர்வு: கள்ளக்குறிச்சியில் 10% மாணவர்கள் ‘ஆப்சென்ட்’

மேலும்,. சபாநாயகர் இன்றைய தினம் நடந்து கொண்ட விதம் சரியல்ல என கூறிவிட்டு அலுவல் ஆய்வு குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு பதில் தரும்வரை தொடர்ந்து கேள்வி எழுப்புவோம். தமிழக ஆளுநர் ஏட்டிக்கு-போட்டியாக நடந்து கொண்டிருக்கிறார். அரசியல் சாசனம் குறித்து தெரியாத ஒருவர் ஆளுநராக இருக்கிறார். அவரை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.