“நாட்டு நாட்டு” பாடலின் மூலம் ஆஸ்கார் விருது வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரித்துள்ளார்.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் கச்சிதமான நடனத்தால் உலகளாவிய நாட்டு நாட்டு பாடல் பிரபலமாக மாறியது. இந்தப் பாடலுக்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் எழுதியுள்ளார், மேலும் பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார்.
ஆஸ்கார் விருதுக்குள் நுழைவதற்கு முன், ஜனவரி மாதம் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதையும், சிறந்த பாடலுக்கான விமர்சகர்களின் சாய்ஸ் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வென்றது. சில நாட்களுக்கு முன்பு, ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளில் நடனப் பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதையும் வென்ற நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகமாக நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது போலவே ”நாட்டு நாட்டு” பாடலுக்கு ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து வண்ணமயமான அந்த அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கலைஞர்கள் அசத்தலாக நடனமாடினர்.
இந்த நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது தொடர்பாக, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலுங்கானா ராஜ் பவனில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி அவர்களையும், பாடலாசிரியர் சந்திரபோஸ் அவர்களையும் பாராட்டி கௌரவித்தேன். இன்று அவர்கள் ஆஸ்கார் விருது வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும், பாடலாசிரியர் சந்திரபோஸ் அவர்களுக்கும், இயக்குனர் ராஜமெளலி அவர்களுக்கும், நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என அந்த வாழ்த்து செய்தியில் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









