சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் வள்ளலார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலார் வாழ்ந்த மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் சித்தி விளாகம், சத்யஞான சபை ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தார்.
பின்னர் வடலூரில் நடைபெற்ற வள்ளாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் தான் வள்ளலார். இந்திய பண்பாட்டில் சிறு தெய்வ, பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. ஆனால் வெளியிலிருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்சினை உருவானது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் வள்ளலார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் “மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது, வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார் ஆளுநர். ஆளுநர் அவர்களே வள்ளுவரும், வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள் மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள் என பதிவிட்டு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







