ஆளுநர் பதவிக்கு ஆர் என் ரவி தகுதி இல்லாதவர் அவர் பிஜேபிக்கு தான் வேலை செய்து கொண்டிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகமான தாயாகத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
” ஆளுநர் பதவிக்கு தகுதி இல்லாதவர் ஆர் என் ரவி. அவர் பிஜேபிக்கு தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். ராஜ் பவனில் இருந்து கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் உளறிக்கொண்டு கொண்டிருக்கிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ ஏமாற்றங்கள் எத்தனையோ சோதனைகள் எத்தனையோ துரோகங்களை கடந்து இன்று 29 ஆண்டுகளை கடந்து 30வது ஆண்டில் நிற்கிறது.
தமிழகம் முழுவதும் மதிமுகவை நம்முடைய கட்சி தோழர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த கழகம் இன்னும் பல வெற்றிகளை பெற்று வரக்கூடிய சோதனைகளை முறியடித்து கொடியை உயர்த்தும் என்ற நம்பிக்கையோடு 30 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
இயக்கத்திற்கு ஒளி தரும் ஆண்டாக புது வாழ்வு தரும் ஆண்டாக தமிழ்நாட்டிற்கு வழிகாட்டக்கூடிய ஆண்டாக இந்த இயக்கத்திற்கு இந்த ஆண்டு அமையும் என்ற நம்பிக்கையோடு இந்த கொண்டாட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.
காலாவதியாகி போன ஒரு மனிதர் தமிழ்நாட்டில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார். மூன்று பெரிய தலைவர்கள் எத்தனையோ சோதனைகள் கடந்து வளர்ந்த வரலாறு தெரியாமல் ஆளுநர் உளறிக் கொண்டிருக்கிறார். தற்போது காலாவதியாகிப்போன அவர் காலாவதி பற்றி பேசுகிறார்.
இதுவரை இருந்த ஆட்சிகளிலே இது சிறப்புமிக்க ஆட்சியாக திமுக அரசின் இரண்டாண்டு ஆட்சி இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுடைய ஆவலை பூர்த்தி செய்கின்ற ஆட்சியாக ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆளுநர் ராஜ்பவனை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர். இந்த பதவிக்கு லாயக்கற்றவர். அவர் இந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை இந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
திராவிட மாடல் என்று சொன்னாலே ஆளுநருக்கு அச்சமும் ஏற்பட்டுள்ளது. கூச்சமின்றி என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே ஆளுநர் உளறிக் கொண்டிருக்கிறார். மதிமுக குறித்து வேண்டுமென்றே துரைசாமி கசப்பை கொட்டி கொட்டி வருகிறார். எந்த கட்சியும் வெள்ளை அறிக்கை வெளியிடாது.” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.