ஹிஜாப் விவகாரம் குறித்து கேரள ஆளுநர் கருத்து

முத்தலாக், ஹிஜாப் என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் அரசு மகளிர் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப்…

முத்தலாக், ஹிஜாப் என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் அரசு மகளிர் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளைப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளே அனுமதிக்காமல் வாசலிலே நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் பரவி நாளடைவில் மதக்கலவரமாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரம் நாடெங்கும் பலதரப்பு மக்களால் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது கருத்துகளைக் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரேபிய சமூகத்தில், பெண் குழந்தைகளைப் பிறந்த உடனேயே, குழி தோண்டி புதைத்துவிடும் வழக்கத்தை சிலர் கொண்டிருந்ததாகக் கூறினார். இதற்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்த போதிலும், சிலருடைய மனங்களில் பெண்களுக்கு எதிரான போக்கு இன்னும் தொடர்வதாக ஆரிப் முகமது கான் குறிப்பிட்டார். மேலும் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஹிஜாப் நடைமுறை இந்தியாவில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதை அவர் குறிப்பிட்டார். இதனை விவாதத்திற்கு ஏற்றால் கூட, பெண்கள் வீட்டிற்குள் முடக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் கல்வி மறுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இஸ்லாமியப் பெண்களை ஓரங்கட்டியே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக முதலில் முத்தலாக் என்பதைக் கண்டுபிடித்ததாகவும் பின்னர் ஹிஜாப்பையும் கொண்டுவந்ததாகவும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.