முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சனம் – அமைச்சர்கள் கண்டனம்!

முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதால் மட்டும் முதலீடுகள் கிடைத்துவிடாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்திற்கு, அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில்…

முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதால் மட்டும் முதலீடுகள் கிடைத்துவிடாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்திற்கு, அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. குறிப்பாக வேலைவாய்ப்பு திறன் கொண்ட பொறியியல் பட்டதாரிகள் கிடைப்பதில்லை என்று தொழில்துறையினர் கூறுகின்றனர் என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பொறியியல் பட்டதாரிகளை விட பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. கல்லூரிகளில் பாடம் நடத்தும் முதுகலை பட்டதாரிகள், தினக்கூலி போல மாதத்திற்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் பெறுகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பன்முக திறன் கொண்ட
கல்வியை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் முக்கிய அம்சங்கள் உள்ளடக்கியதுதான் தேசிய கல்வி கொள்கை என்று குறிப்பிட்டிருந்த அவர் தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உண்டான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது என்றும் அவர் பேசியிருந்தார்.

அதிலும் முதலீட்டாளர்களை சந்தித்து கேட்பதாலோ அல்லது பேசுவதால் மட்டுமே முதலீடுகள் வந்துவிடாது என கூறிய அவர், உலகலாவிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பொருத்தமான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு திறமையான திறன்மிக்க மனித வளத்தை உருவாக்குவதே சிறந்த வழி என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி , முதலமைச்சர் இரண்டு ஆண்டுகளில் ஆரம்ப கல்வி வளர்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். உயர்கல்வி துறையில் படிக்க மாணவர்கள் திறனை வளர்க்க நான் முதல்வன் திட்டத்தினை கொண்டு வந்திருக்கிறார். நான் முதல்வர் திட்டத்தினை சிங்கப்பூர் கல்வி அமைச்சரே பாராட்டி உள்ளார். தமிழகத்தில் கல்வி தரத்தில் வளர வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார். பேப்பரையாவது கவர்னர் படிக்க வேண்டும். அரசியல் வாதி போன்றும் எதிர்கட்சி போன்று பேசுவது வருந்ததக்கது என தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் இன்று மருத்துவ கலந்தாய்வு குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள் தான், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிப்பார்கள். இது நம்முடைய தமிழ்நாட்டு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவிக்கும் பொருந்தும் என கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.