விருதுநகர் அருகே நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் மீது கல் எறிந்து கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் கிராமத்தில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற அரசுப்பேருந்து மருளுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், பேருந்திற்காக காத்திருந்த பயணிகளில் யாரோ ஆத்திரத்தில் பேருந்தின் மீது கல் வீசி தாக்கியுள்ளனர்.
இதில் பேருந்தின் பின்பக்க கதவு உடைந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சூலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கல் எறிந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக, பேருந்தின் மீது கல் எறிந்து கண்ணாடியை உடைக்கும் பழக்கம் தொடர்வதற்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.








