பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதனை மனிதனே சுமக்கும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என திராவிடக் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசும் ஆதினங்கள் வாயிலாக நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது.
இதையடுத்து, கடுமையான எதிர்ப்பு எழுந்தது. தருமபுரம் ஆதினம் மயிலாடுதுறை ஆதினம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அனுமதியை மீறி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் ஆதீனங்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி வழக்கம்போல் நடைபெறும் என்றும், யாரையும் கட்டாயப்படுத்தி பல்லக்கை சுமக்க சொல்லவில்லை என்றும் கூறினார். மேலும் குரு-சிஷ்ய உறவு க்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதற்கு நன்றியையும் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் தெரிவித்துக் கொண்டனர்.







