போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் அரசு புதிய வரலாறு படைத்திருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பேசிய, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2 ஆயிரத்து 136 பேரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்தாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், கஞ்சா வைத்திருப்பது குற்றம் என்றால் அவர்களை ஏன்? கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3ந் தேதி உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார். போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் அரசு புதிய வரலாறு படைத்திருப்பதாகவும், போதைப் பொருளை வேரோடும், வேர் மண்ணோடும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் அளவுக்கு கஞ்சாவும், குட்காவும் தலைவிரித்தாடியது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.




