மாணவர்கள் கல்வியறிவுடன் கலையறிவு மற்றும் பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாணவர்களுக்கான கலைத் திருவிழாவில் மாநில அளவிலான வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர், “தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிவாகை சூடிய மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்று வெற்றி பெற்றது வாழ்நாள் முழுவதும் கொண்டாட வேண்டியது. நாளை தமிழ்நாட்டை காக்கும் லட்சியவாதிகளாக நீங்கள் இருப்பீர்கள். அதற்கு முதற்கட்ட வெற்றியாக இதை கருதிட வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் அறிவுத்திறனையும் பல்வேறு திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 13 ஆயிரத்து 210 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளில் முதல் 20 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
மருத்துவம் மற்றும் தொழில் பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 13,210 பள்ளிகளில் வானவில் மன்றம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். படித்து, வேலைக்கு போகிறோம், சம்பாதிக்கிறோம் என்பதை விட கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பகுத்தறிவையும் கற்று கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.







