அக்னிபாத் திட்டம் குறித்து எழுப்பப்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் நோக்கில் அக்னிபாத் எனும் புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 14ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 46 ஆயிரம் பேர் ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இதற்கான பணி இன்னும் 90 நாட்களில் தொடங்கும் என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
இந்த திட்டத்திற்கு வரவேற்பு உள்ள அதேநேரத்தில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. பிகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்பட நாட்டின் பல பகுதிகளில் இந்த திட்டத்திற்கு எதிராக ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தின் கீழ் பணிக்குச் சேர வயது உச்சவரம்பு 21 என்பதால் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ராணுவத்தின் திறனை பாதிக்கும் என்றும் இந்த திட்டத்தின் கீழ் பணிக்குச் சேரும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில், இந்த திட்டத்தை முன்வைத்தது ராணுவம்தான் என்றும், 2 ஆண்டுகால தீவிர ஆலோசனைக்குப் பிறகே இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களாக பணிக்குச் சேருபவர்கள் ராணுவத்தில் பல்வேறு பயிற்சிகளை பெறுவார்கள் என்றும் அவர்களில் சிறந்து விளங்கும் 25 சதவீதத்தினர் ராணுவத்தின் நிரந்தரப் பணியாளர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ள மத்திய அரசு, மற்றவர்கள் அவர்கள் விரும்பினால் மத்திய ஆயுதப்படை, மாநில காவல்துறை ஆகியவற்றில் முன்னுரிமை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், 4 ஆண்டு காலத்திற்குப் பிறகு அவர்கள் திறன் மிகுந்தவர்களாகவும் சுமார் ரூ.12 லட்சம் தொகுப்பூதியத்துடனும் பணியில் இருந்து வெளியே வருவார்கள் என்றும் அத்தகையவர்கள் தொழில்முனைவோர்களாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற திட்டம் வேறு சில நாடுகளிலும் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, எனவே, இளம்படையினரின் அனுபவமின்மை படையின் திறனை பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளது. நமது ராணுவத்தின் படைபலத்தில் அக்னிவீரர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்கள் அதன் பிறகு தங்கள் வாழ்நாள் முழுவதும் நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, வரும் ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய எண்ணிக்கையைப் போல் 3 மடங்கு அதிக எண்ணிக்கையில் அக்னிவரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.











