ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் எனும் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டு காலம் பணிபுரியும் வகையில் அக்னிபாத் எனும் புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுவார்கள் என்றும் அவர்களில் 25 சதவீதம் பேரின் பணி 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பீகாரின் சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா ரயில் நிலையத்தில், நின்றுகொண்டிருந்த இன்டர்சிட்டி விரைவு ரயிலின் ஒரு பெட்டிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தீ வைத்தனர். அதோடு, ரயிலின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
பீகாரின் கயா, முங்கெர், சிவான், பாகல்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போாரட்டங்கள் நடைபெற்றன.
ராணுவத்தில் சேர வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக தாங்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறிய போராட்டக்காரர்கள், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தின் வயது வரம்பு 17.5 ல் இருந்து 21 ஆக இருப்பதால் தங்களில் பலர் தகுதி இழப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், இந்த திட்டத்தால், நிண்ட கால பணி வாய்ப்பும் கிடைக்காது, ஓய்வூதியமும் கிடைக்காது என தெரிவித்துள்ள அவர்கள், இது ஏமாற்றத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்தனர். எனவே, மத்திய அரசு இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாநகரத்தில் உள்ள பிர்லாநகர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், ரயில் வழித்தடத்தில் தீ வைத்தனர். மேலும், நிலைய அலுவலர் அலுவலகத்தையும் அவர்கள் சூரையாடினர்.
இதேபோல், ஹரியானாவின் ரெவாரி நகரில் நடைபெற்ற போராட்டத்திலும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை களைத்தனர்.
இதனிடையே, அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிபரீட்சையில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பில், ரேங்க் இல்லை, ஓய்வூதியம் இல்லை, பணியில் சேர்பவர்களுக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை என்பதையெல்லாம் பார்க்கும்போது இந்த அரசுக்கு ராணுவத்தின் மீது மதிப்பே இல்லை என்பது வெளிப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையில்லா இளைஞர்களின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும் என்று வலயுறுத்தியுள்ளார். அக்னிபாத் எனும் பெயரில் அக்னிபரீட்சை செய்ய வேண்டாம் என்று பிரதமரை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












