ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓபிஎஸ் பேட்டியளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை என்பது தேவையற்ற ஒன்று. இரட்டை தலைமை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கட்சி இரண்டாக உடையக் கூடாது. எடப்பாடி பழனிசாமியுடன் பேசத் தயாராக இருக்கிறேன். எனது கருத்தை கூறிவிட்டேன். எடப்பாடி பழனிசாமி தனது கருத்தைக் கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதாவது தனது முடிவு என்ன என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்பதை ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். இதன்மூலம் இருவருக்கும் இடையே விழுந்துள்ள இடைவெளியும் வெளியே தெரிந்துள்ளது.
இந்த நிலையில் சேலத்திலுள்ள தனது இல்லத்தில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் தங்கமணி, சரோஜா ஆகியோரும் இணைந்துள்ளனர்.
ஓபிஎஸ் பேட்டி, இபிஎஸ் அவசர ஆலோசனை என ஒற்றைத் தலைமை விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் கருத்தைப் பொறுத்தே அதிமுகவில் ஒற்றைத் தலைமையா அல்லது சுமூக தீர்வு பேசுவார்த்தையா என்பது தெரியவரும்.







