அக்னிபாத் திட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.பி. வருண் காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார்.
17 வயதுக்கு மேல் 21 வயதுக்குள்பட்ட இளைஞர்களுக்கு ராணுவத்தில் 4 ஆண்டுகள் வரை பணிபுரிய வாய்ப்பு அளிக்கும் ‘அக்னிபாத்’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அக்னிபாத் திட்டத்தால் ராணுவத்தில் பணி பாதுகாப்பு இல்லை என்று கூறி வடமாநிலங்களில் இளைஞர்களில் ஒருசாரர் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் 4 ஆண்டுகள் இளைஞர்கள் பணியாற்றிய பிறகு, 75 சதவீத வீரர்கள் வேலையில்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகும். ஒவ்வோர் ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திவிடும்.
இந்த இளைஞர்களை பெருநிறுவனங்களும் பணியில் அமர்த்தாது. நான்கு ஆண்டு சேவையால் இந்த இளைஞர்களின் கல்வியும் தடைபடும். மற்றொரு வேலைக்கு செல்வதிலும் அவர்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான செலவும் வீண் தான் என்று அந்த கடித்தத்தில் வருண் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
-மணிகண்டன்








