கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும் ஜாமீன் வழங்கவும் கோரி யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும் ஜாமீன் வழங்கவும் கோரி யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் எனவும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், அருண், கிரிதர் உள்ளிட்ட 10 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், சிசிடிவி காட்சிகள், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாகவும் கோகுல்ராஜை கடத்தியதாகவோ, கொலை செய்ததாகவோ சிசிடிவி பதிவுகள் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும், அந்த தண்டனையை நிறுத்தி வைப்பதுடன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு, நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி மற்றும் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.