உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்துவர இதுவரை 90 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்துதுறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்றுவரை போர் நடந்துவருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து பல லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அவர்கள் நாட்டுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மக்களை உக்ரைனில் இருந்து அழைத்துவர மத்திய அரசால் ஆபரேஷன் கங்கா, திட்டம் செயல்படுத்தப்பட்டு, இந்த விமானங்கள் மூலம் முதற்கட்டமாக மாணவர்கள் அழைத்துவரப்பட்டனர்.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட மாணவர்களுடைய எண்ணிக்கை தொடர்பாகவும் அழைத்து வருவதற்கு எவ்வளவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டது? என்பது தொடர்பாகவும் மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் “டெரிக் ஓ பிரையன்” இன்று எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், உக்ரேனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் தாயகம் அழைத்து வந்தது. மேலும், பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 11ம் தேதி வரை 22,500 இந்திய மாணவர்கள் அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தார். மாணவர்களை அழைத்து வர இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 14 விமானங்கள் என மொத்தமாக 90 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளதாக எழுத்துப்பூர்வ பதிலில் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








