வலிப்பு வந்தது போல் நாடகமாடிய ஞானசேகரன் – முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வலிப்பு வந்ததுபோல் நாடகமாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையில் ஞானசேகரன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. மேலும் அவர்மீது கடத்தல், திருட்டு என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

ஞானசேகர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதும், பல பெண்களின் வீடியோக்கள் அவர் தொலைபேசியில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து ஞானசேகனின் கைப்பேசியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களில் இருக்கும் பெண்களின் விவரங்களும், அதில் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஞானசேகரன் அளிக்கும் பதில்கள் அனைத்தும், எழுத்து பூர்வமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இவ்வழக்கில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த நிலையில், 2வது நாள் விசாரணையின் போது போலீஸ் காவலில் இருந்த ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஞானசேகரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஞானசேகரன் விசாரணையின் போது வலிப்பு வந்தது போல் நடித்ததாகவும், மருத்துவ பரிசோதனையில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.