இந்த நேரத்தில் தான் அவரது வாழ்வில் ஒரு திருப்பம் நேர்ந்தது. அஜ்மீர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு 15 வயதாகிவிட்டாலே திருமணம் செய்து வைத்து விடுவது பெற்றோர்களின் வழக்கம் . அதே போலவே பாயலுக்கு 15 வயதான போது அவரது பெற்றோர் அவருக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு பெண்ணை அனுப்பி வைக்கும் கானா என்ற ஊர்வல சடங்கின் போது, தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று மறுத்து கணவன் வீட்டுக்கு செல்லாமல் பெற்றோரோடே இருந்து விட்டார் . தன்னை படிக்கவும் ,கால்பந்து விளையாடவும் அனுமதித்தால் போதும் ,தான் குடும்பத்தை , வீட்டு வேலைகளை ,வயல் வேலைகளையும் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்து கடும் போராட்டத்திற்கு பிறகு அவரது கால்பந்து கனவிற்கு பெற்றோரிடம் அனுமதி பெற்றார்.

பாயல் மட்டுமல்ல காயத்ரி பவார் ,சாவித்ரி ஆகிய இருவரும் பெற்றோர்களின் கட்டாய திருமணத்தை எதிர்த்து போராடி கால்பந்து விளையாட தொடங்கினர். இவர்களோடு கும்கும், பூஜா உள்ளிட்ட சிறுமிகள் கால்பந்து விளையாட முன்வந்தார்கள் . பாயல் தான் அவர்களை எல்லாம் பெண்களுக்கான கனவு உலகத்தில் சாதனை படைக்க அழைத்து வந்தார் என்று சொல்லலாம். பாயலின் சம்பவத்திற்கு பிறகு பெற்றோர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தால் கூட 18 வயது வரை அந்த கானா சடங்கை நடத்த தயங்கினர். பாயல் தான் சச்சியாவாஸ் கிராமத்தில் இருந்து விளையாட்டிற்காக வெளியே வந்த முதல் சிறுமி. ஆண்களோடு சேர்ந்து கால்பந்து விளையாடி பயிற்சி பெற்றார் பாயல்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சச்சியாவாஸில் உள்ள பெண்கள் விளையாட்டு மைதானம் குப்பை கொட்டும் இடமாக மாறி இருந்தது . தினமும் பள்ளி முடித்து இந்த சிறுமிகள் அந்த மைதானத்தை சுத்தம் செய்து கால்பந்து மைதானமாக மாற்றி பயிற்சி மேற்கொண்டனர் . ஆரம்பத்தில் சுடிதார் அணிந்தே இந்த சிறுமிகள் கால்பந்து பயிற்சி பெற்றனர். கால்பந்திற்கான கால்சட்டை (shorts) அணிய கிராமங்களில் எதிர்ப்பு எழுந்தததே அதற்கு காரணம் . பிறகு லெக்கிங் மாதிரியான முழு நீள அளவிலான பேண்ட் அணிந்து அதன் மேலே கால்சட்டை அணிந்து விளையாடி உள்ளனர். இன்றும் இத்தகைய உடையை தான் அணிந்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர் .
பாயல் பங்கேற்ற முதல் போட்டி மணிப்பூரில் நடைபெற்றது. அந்த போட்டியில் பாயல் மற்றும் தனது சக தோழிகளுடன் சிறப்பாக விளையாடி கோப்பையை அடித்து வந்தார். வெற்றி பெற்று தங்க பதக்கத்தோடு திரும்பியவர்களை சச்சியவாஸ் கிராமமே வரவேற்றது. அதைத்தொடர்ந்து பாயல் மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வெற்றி பெற்றதோடு பரிசுத் தொகைகளையும் பெற்று வந்துள்ளார். இவரது சாதனைகளை கவுரவிக்கும் வண்ணம் Unicef நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தார் . அவரின் கால்பந்து கனவு நனவானதை நம்மிடம் விவரித்தார். அவரிடம் பாயல் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினோம் . கால்களில் அணியும் கொலுசு என்று பாயல் கூறியது கூடுதல் பொருள் பொதிந்ததாக அமைந்தது.








- சுகிதா சாரங்கராஜ்