தேனி அருகே பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், வேறு எந்த குழந்தைக்கும் இந்த நிலைமை ஏற்படாதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்த 8 வயது சிறுமி ஹாசினி ராணி இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
பூங்கா அமைப்பதற்காக நீண்ட நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், சிறுமி உயிரிழப்பு குறித்து அவரது தாயார் கார்த்திகா நியூஸ் 7 தமிழுக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தனது மகள் மூலக்கடை பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்ததாகவும், எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக மகளுடன் வந்திருந்ததாகவும், இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மகளின் செருப்பு அந்த பள்ளத்தில் மிதப்பதை பார்த்து கணவர் உள்ளே இறங்கி பார்த்தார். அப்போது, ஹாசினி மூழ்கி இருந்தது தெரியவந்தது. மேலும் தனது கணவரை பள்ளத்தில் இருந்து மேலே ஏற்ற 4 பேர் உதவி செய்தனர். அந்த அளவிற்கு பள்ளம் ஆழமாக இருந்துள்ளது.
அண்மை செய்தி : சிறுமி உயிரிழப்பு : ஓபிஎஸ் மற்றும் வானதி சீனிவாசன் கண்டனம்
மருத்துவமனையில் மகளின் உடலை அவசர அவசரமாக உடற்கூறாய்வு செய்து தங்களிடம் ஒப்படைத்துவிட்டனர். இந்த பகுதியில் உள்ள கழிவறை அடைத்து விட்டதால்தான், அந்த இடத்திற்கு மகள் சென்றுள்ளார். மேலும் அங்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது தங்களுக்கு தெரியாது என்றார். அறிவிப்பு பலகையோ, வேலி அமைத்திருந்தாலோ குழந்தையின் உயிர் இன்று பறிபோய் இருக்காது என கூறினார்.
ஆனால், பேரூராட்சி நிர்வாகம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் குழந்தைக்கு நேர்ந்த சோகம் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேட்டியளித்த சிறுமி ஹாசினியின் சித்தப்பா, குழந்தை உயிரிழந்ததற்கு பேரூராட்சி நிர்வாகம் எந்த விதத்திலும் தங்களுக்கு ஆதரவாக இல்லை என்றார். இதுவரை பேரூராட்சி சார்பிலோ, மாவட்ட நிர்வாகம் சார்பிலோ யாரும் வந்து ஆறுதல் கூட தெரிவிக்க வில்லை என வேதனை தெரிவித்தார். பள்ளியில் நன்றாக படிக்கும் ஹாசினி, அரசின் அலட்சியத்தால் இன்று பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
– இரா.நம்பிராஜன்








