சிவகாசி அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வடமாநிலத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் – பத்மா தம்பதியின் 8 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற நிலையில், மறுநாள் காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
விசாரணையில், மஜம் அலி என்ற அஸ்ஸாம் மாநில தொழிலாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் மஜம் அலிக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறையில் இருக்க தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
-ம.பவித்ரா








