பொன்னியின் செல்வன் – 1 பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெயம்ரவி தனி ஒருவன் 2 ம் பாகம் அப்டேட் கொடுத்துள்ளார்.
வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த வாரம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் பட புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக நேற்று சென்னை தரமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், த்ரிஷா, மணிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராஜ ராஜ சோழனாக நடித்துள்ள ஜெயம் ரவி தனது பொன்னியின் செல்வன் அனுபவங்களை பற்றி செய்தியாளர்களிடம் பேசினார்.
எனக்கு இயல்பாகவே சுருட்டை முடி. இப்படத்திற்காக நீளமாக முடி வளர்க்க வேண்டும். இதற்கு மேல் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது என்று, அதை ஸ்லோவ் மோஷனில் நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் என கூறினார்.
பொன்னியின் செல்வன் – க்கு பிறகு என்ன செய்ய போகிறாய் என என் அண்ணன் மோகன் ராஜா கேட்டார். அதற்கு நான் தனி ஒருவன் 2 இயக்கு என கூறினேன். இதைப் பற்றி மணி சாரிடமும் கேட்டேன். அதற்கு அவர், இதைவிட சிறப்பாக ஒன்றை செய்வாய் என்று கூறினார். இதை விட நல்ல படம் பண்ண முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்தில் கற்று கொண்ட அனுபவங்களைக் கொண்டு இனி எது செய்தாலும் சிறப்பாக செய்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது என கூறினார்.
கடந்த 2015 ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படத்தை ஜெயம்ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில் உருவான தனி ஒருவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஜெயம்ரவியின் தனி ஒருவன் 2 அப்டேட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
நாங்கள் சோர்வடையும் போதெல்லாம் மணி சாரை பார்ப்போம். அவர் ஓடி கொண்டே இருப்பார். அவரே இடைவிடாமல் செயல்படும் போது நமக்கு என்ன என்று சுறுசுறுப்புடன் பணியாற்ற சென்று விடுவோம் என்றார்.
அ. மாரித்தங்கம்







