முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு இந்தியா கட்டுரைகள்

விளம்பரங்களில் இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?


சுகிதா சாரங்கராஜ்

கட்டுரையாளர்

ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், அண்மையில்  அதிகம் படிக்காத  தந்தை ஒருவர்,  தன் பெண் குழந்தையின்  கனவை சொல்கிறார். அதே நிகழ்ச்சியில், நன்கு படித்து பணியில் இருக்கும் அவரது மனைவி  ‘அவருக்கு ஒன்றும் தெரியாது’ என்று வெளிப்படையாக விமர்சிக்கிறார்.  இது விவாத பொருளானது. சமூக வலைதளங்களில் அந்த பெண்ணை  நேரடியாக திட்டி தீர்க்கிறார்கள் . இன்னொரு புறம் அந்த தந்தையை அதிகளவில் கொண்டாடுகிறார்கள் .  பிள்ளைகளை பெற்ற அப்பாக்கள் கனவு காண்பது என்பது எதார்த்தமானது தான் . அதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்பது இல்லை.

எளியவர்களை மேடை ஏற்றுவது, அறியாமையில் இருப்பவர்கள் செய்யும் சிறு செயல்களை கூட  கொண்டாடுவது, சமூகத்தில் சாமான்யர்களை கொண்டாடுவது என எளிமையையும் அத்தகையவர்களின் உணர்வுகளையும்  வியாபாரம் ஆக்குவதே இன்றைய வர்த்தக யுக்தியாக இருக்கிறது. இதற்குள் இருக்கும்  நுண்ணரசியல் புரிந்தாலும் சாமான்யர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், அவர்கள் வாழ்வில் வெவ்வேறு மாற்றங்கள் காண வைப்பதும்,  ஏற்ற தாழ்வுகளுடனான சமூகத்தில் எளியவர்களின் மீதான வெளிச்சம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என பார்க்கும் போது இந்த எளியவர்களை வியாபாரம் ஆக்கும் பார்முலாவை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அறிவியலை ஏமாற்றும் விளம்பரங்கள்

அதே  ஒரு கணவன் தன் மனைவிக்கு  ஒன்றும்  தெரியாது என்று , அதே  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லி இருந்தால் பத்தோடு பதினொன்றாக கடந்து போயிருக்கும் இந்த சமூகம். அந்த தந்தை பெருமளவில் கொண்டாடப்பட்டது அந்த பெண்ணை அம்பலப்படுத்துவதற்காகவே என்பது அப்பட்டமாக தெரிந்தது. மேலே கூறப்பட்டவை அந்த பெண்ணின் கருத்துக்கு ஆதரவு நிலைப்பாடு என்ற கண்ணோட்டத்தில் அல்ல. அந்த பெண்ணை விமர்சித்தவர்களை விட அந்த அப்பாவை பாராட்டியவர்களிடம் அந்த பெண் மீதான விமர்சனத்துக்காகவே அவரை பாராட்டியது போல் ஒரு தோற்றம் இருந்தது. ஆனால் தினமும் விளம்பரங்களில் பெண்களை எத்தனை முறை தரக்குறைவாக பேசுகிறார்கள், அவர்கள் உடல் குறித்து கிண்டல் செய்கிறார்கள் ஆண்கள்.

தன்னம்பிக்கை என்பது முகத்தில் பூசும் க்ரிம்களால் ஏற்படுகிறது என அறிவியலையும் ஏமாற்றுகிறார்கள். ஆண்கள் பத்திரிகைகள் படிக்க கூடியவர்கள், பெண்கள் வீட்டில் சமையற்கூடங்களிலயே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள்

போன்று எத்தனை விளம்பரங்களைப் பார்த்து கடந்திருக்கிறோம்.


விளம்பரங்களில் பாலின பாகுபாடு அதிகம்

தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து விளம்பரங்களில் பெண்கள் வீட்டு வேலை செய்ய கூடியவர்கள் என்பதை உணர்த்தக் கூடிய விளம்பரங்கள் தான் இன்று வரை வந்துக் கொண்டிருக்கின்றன. பெண்களை உருவக்கேலி செய்வதும், பெண்களுக்கு அழகுணர்ச்சியில் மட்டுமே நாட்டம் இருப்பது போன்ற பிம்பத்தையுமே தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் கட்டமைத்திருக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் பொருட்களை விற்க விளம்பரமா? அல்லது பெண்கள் மீதான மதிப்பீட்டிற்காக விளம்பரமா? என்று கேள்விக்குள்ளாக்கும் சூழலே உள்ளன . சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள் போன்றவற்றிற்கு பெண்களை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள்அதே வீட்டில் மின்சாதன பொருட்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பொருட்களின்

 விளம்பரங்களுக்கு ஆண்களையே முன்னிலைப்படுத்துகின்றன. விளம்பரங்களில் பெரும்பாலும் தன்னம்பிக்கையை உணர்த்தும் இடங்களில் ஆண்களின் குரல் பதிவிலேயே ஒலிக்கும்.

பெண்களின் குரல் பதிவுகள் கூட குறைவான அளவிலேயே விளம்பரங்களில் பயன்படுத்தப்படக் கூடிய சூழல் தான் உள்ளன.

விளம்பரங்களில் பாலின சமத்துவம்?

இந்திய விளம்பர தர நிர்ணய கூட்டமைப்பு, கடந்த மார்ச் மாதம் தான் பெண்களுக்கு எதிராக அல்லது பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் விளம்பரங்கள் தயாரிப்பது சட்டத்திற்கு புறம்பானது  என அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே சாதி, மதம், பாலினம், இனம் ரீதியாக விமர்சிப்பது தவறானது  என்று சட்டம் இருக்கிறது.

3 வினாடிகள் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் தொடங்கி,  3 மணி நேரம் ஒளிபரப்பாகும் திரைப்படங்களில் ஆண் மற்றும் பெண்  கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்படுவது

தொடர்பான ஆய்வுகளை பாலின சமத்துவத்திற்காக தொடர்ந்து இயங்கும் தன்னார்வ அமைப்பான பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் மேற்கொண்டுள்ளது.  கடந்த 5 ஆண்டுகளில் இது தொடர்பாக பாப்புலேஷன் ஃபர்ஸ்ட்டின் இயக்குநர் சாரதா,  172 விளம்பர நிறுவனங்களின் 375 பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாற்றம் தொடங்கிய 2020

ஆண்களை விட, பெண்கள் மதிப்பீட்டில் குறைந்தவர்கள் என வழக்கமான கட்டமைப்புகளை முன்வைக்கிறது 40 %  விளம்பரங்கள் . பாலின சமத்துவத்தோடு பெண்களை முன்னிருத்தும் விளம்பரங்கள் 43% என்று இருப்பது சற்று ஆறுதலாக இருந்தாலும், 2020 க்கு பிறகு தான் இந்த மாற்றங்கள் எல்லாம் வந்துள்ளன. பாலின  பேதம் தொடர்பான விழிப்புணர்வின் வெளிப்பாடாக தற்போது விளம்பரங்கள் பாலின சமத்துவத்தோடு தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும்

பெண்களை தாழ்த்தி காண்பிக்கப்படும் விளம்பரங்களே  அதிகளவில் பார்க்கப்படுவதாக

அந்த அறிக்கையில் சுட்டிக்காண்பிக்கிறார் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பின் இயக்குநர் சாரதா .

விளம்பரங்கள் – ஆய்வு தரும் செய்தி

பொதுவாகவே விளம்பரங்களை புள்ளிகள் அடிப்படையில் மதிப்பிடுகின்றனர். பாலின ரீதியாக தரக்குறைவாக சித்தரிக்கும் விளம்பரங்கள் 0-1  புள்ளிகள், பாலின ரீதியாக தாக்கி சித்தரிக்கும் விளம்பரங்கள் 1-2  புள்ளிகள் , பெண்கள் என்றாலே இப்படியானவர்கள் என வழக்கமான வரையரைக்குள் சித்தரிக்கும் விளம்பரங்கள் 2-3 புள்ளிகள் , ஆண்கள் -பெண்கள் குறித்த வழக்கமான சித்தரிப்புகளில் இருந்து மாறுபட்டு சித்தரிப்பது 3-4  புள்ளிகள் ,பாலின சமத்துவத்தோடு பெண்ளையும் -ஆண்களையும் சித்தரிப்பது  4-5  புள்ளிகள் என்ற பாலின சமத்துவம் தொடர்பாக மதிப்பிடப்படும் GS (Gender Sensitivity) புள்ளிகள்  மூலம் விளம்பரங்களை தர நிர்ணயம் செய்கின்றன. இந்த  புள்ளிகள் மதிப்பீடு  விளம்பரங்களை பார்க்கும் வயதினரையொத்தும் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும் மதிப்பீடுகள் அடிப்படையில் பெண்களை குறைத்து காட்டும் விதமாக சித்தரிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது தான் இந்த ஆய்வு உணர்த்தும் செய்தி.

பெண்கள் என்றாலே…?

உடல் ரீதியாக பெண்களை கேலி செய்தல் , பெண்கள் அழகுணர்ச்சியோடு இருப்பவர்கள் என்ற சித்தரிப்பது, அழகு மட்டுமே பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் என்று சித்தரிப்பது, திருநங்கைகள், திருநம்பிகள்  உள்ளிட்ட LGBTQIA+ சமூகத்தினரை விளம்பரங்களில் பயன்படுத்தாமலே இருப்பது, ஆண்களை போற்றுவது, ஆண்கள் தான்  திடமானவர்கள், தகுதியானவர்கள், திறமைமிக்கவர்கள் அதிகாரமிக்கவர்கள் என்று சித்தரிப்பது, ஆண்கள்  தவறு செய்தாலும் அதனை போற்றும் விதமாக சித்தரிப்பது என்பது காலம் காலமாக விளம்பரதாரர்கள் முன்வைக்கும் வழக்கமான விளம்பர முறை. அது மட்டுமல்ல

ஆண்களை முக்கிய முடிவுகளை எடுக்க கூடியவர்கள் என்று சித்தரிப்பது , பெண்கள் முக்கிய முடிவுகள் எடுக்க திணறுவது போன்று சித்தரிப்பது, பெண்களைப் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக சித்தரிப்பது

என பல கோணங்களில் விளம்பரங்கள் பாலின சமத்துவத்துக்கு எதிராக தயாரிக்கப்படுகின்றன.

விளம்பரங்களில் நவீன அடிமைத்தனம்

கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்துக்கு வீட்டு உபயோக சமையல் சாதன பொருட்கள்  50 சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை என்று முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆண்கள் வெளி உலகையே ஆள்பவர்கள் போன்று காண்பிப்பது,பெண்களுக்கு வீட்டை விட்டால் ஒன்றுமே தெரியாது போன்று சமூகத்தில் மீண்டும் மீண்டும் இந்த வேலை ஆண்களுக்கானது, இந்த வேலை பெண்களுக்கானது என தொடர்ந்து விளம்பரங்களில் காண்பிப்பதன் விளைவு இன்னும் பெண்களை நவீன அடிமைத்தனத்தோடு நடத்த உதவுகிறது .

இன்று பெண்கள் அதிகளவில் படித்து,  உயர் பொறுப்புகளில் அங்கிங்கெணாதபடி பணியாற்றி வருகிறார்கள்.  ஆண்களால் கைவிடப்பட்ட போதும் தனித்து இயங்குகிறார்கள் . அப்படி இருக்கும் போது, பெண்கள் எப்போதும் ஆண்களை சார்ந்து இயங்குகிறார்கள் என சித்தரிப்பது,  உலகெங்கும் சுற்றித்திரிந்து வேலை செய்பவர்கள் பெண்கள் அல்ல என்பது போன்றும், பூட்டிய அறைக்குள் மட்டுமே பெண்களுக்கான வேலை என்பது  போன்றும் சித்தரிப்பது ஒருபக்கம் தொடர்கிறது.  அதே நேரத்தில் ஆண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, உயர்ந்த பொறுப்புகள், நிதி ஆதாரத்தை பெருக்குதல் ,நிதி மேலாண்மை செய்வது போன்று  ஆண் கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுவதும், காண்பிக்கப்படுவதும் வருத்தத்திற்குரியது.

பொதுத்  துறை நிறுவனமான LIC  தனது விளம்பரம்  ஒன்றில் கணவரின் 40வது வயதில் மனைவிக்கு மாதாந்திர வருமானம் வரும்படியான ஆயுள் காப்பீடு திட்டத்தை பரிசளித்தார் என்று ஒரு விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது. அது அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் வெளிவந்தன. பார்ப்பதற்கு

இந்த விளம்பரம் பெண்களின் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது போன்று இருந்தாலும் பெண்கள் வருமானம் ஈட்டக்கூடியவர்கள் அல்ல; ஆண்களை சார்ந்து இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக அந்த விளம்பரம் உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது

என்பது தான் விளம்பரத்துக்குள்  இருக்கும் செய்தி.

சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எளிதில் சென்றடையக் கூடிய இடத்தில் விளம்பரங்களே இருக்கின்றன. இரண்டு தசாப்தங்கள் கடந்தும் புள்ளி ராஜா விளம்பரத்தை தமிழ்நாடு இன்றும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் என்றால் ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பார்க்கும் போதும் , கேட்கும் போதும் அது ஆழ்மனதில் பதிகிறது. அப்படி தான் விளம்பரங்கள் நம் அனைவரின் மனதிலும் பதிந்துள்ளன.

பாலியல் சமத்துவத்துடன் வந்த விளம்பரங்கள்

குழந்தைகளின் நாப்கின் விளம்பரங்களில் குழந்தையை பராமரிப்பது தாயின் வேலை போன்றே தொடர்ந்து காண்பிக்கப்படுகின்றன. இன்றைக்கு கள எதார்த்தத்தில் சில ஆண்கள் குழந்தைகளை பராமரிப்பது, நாப்கின்கள் மாற்றுவது போன்றவற்றை செய்தால் கூட விளம்பரங்களில் தாய்மார்கள் செய்யும் விதமாகவே காண்பிக்கப்படுகிறது. இதிலிருந்து மாறுபட்டு முன்னணி நாப்கின் நிறுவனமான பாம்பர்ஸ் திறம்பட ஒரு விளம்பரத்தை தயாரித்தது . அப்பாக்கள் குழந்தைகளை பராமரிப்பது, நாப்கின் மாற்றுவது ,தூங்க வைப்பது  போன்று வடிவமைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் இந்திய கிரிக்கட் வீரர்  விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு குழந்தை பிறந்திருந்ததையொட்டி விராட் கோலியை அப்பாக்கள் சமூகத்திற்கு வரவேற்கிறோம் என வடிவமைக்கப்பட்டிருந்தது .

விராட் கோலி கிரிக்கெட்டில் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் குழந்தையை பராமரிப்பது என்பது கடும் சவாலான ஒன்று . அத்தகைய சவாலை எண்ணி வருந்த வேண்டாம் . நாங்கள் பயிற்சி தருகிறோம்

என குழந்தையை பராமரிக்கும் தந்தை சொல்லும் விதம் வடிவக்கப்பட்டிருந்த அந்த விளம்பரம் டிவிட்டரில் #DadsForVirat #Pampers என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடப்பட்டது.

பாரத்தைப் பங்கு போடுங்கள்!

குழந்தை பராமரிப்பு மட்டுமல்ல, வீட்டு பராமரிப்பு குறிப்பாக துணி துவைப்பது பெண்களின் வேலை என்று தான் பெரும்பாலான இந்திய சமூக ஆண்களின் மனநிலையில் உள்ளது. இதனை மாற்றும் விதமாக #sharetheload என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஆண்களும் துணி துவைப்பது போன்று,  சலவை சோப் மற்றும் பவுடர்களில் முன்னணியில் இருக்கும் ஏரியல் நிறுவனம்  விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது. கூடவே ஒரு ஆய்வையும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்நிறுவனம் நடத்தியது.

துணி துவைப்பது வீட்டில் யாருடைய வேலை என்ற கேள்விக்கு 78% ஆண்கள் வீட்டில் உள்ள பெண்களின் வேலை என்று தெரிவித்திருந்தார்கள்.

மூன்றில் இரண்டு குழந்தைகள், வீட்டுவேலைகள் தாய்மார்களுக்கானது என்றும் அந்த ஆய்வில் தெரிவித்திருந்தனர் என்பது இந்தியாவின் எதார்த்த மனநிலையில் உறைந்திருக்கும் உண்மை. இதனை மாற்றுவதற்கு ஒரு விளம்பரம் அல்ல, இன்னும் பல நூறு விளம்பரங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது . மக்கள் மனதில் எளிதில் இடம்பிடிக்கும் வல்லமை கொண்ட விளம்பரங்களால் மட்டுமே பாலின சமத்துவ மாற்றத்தை சமூகத்தில் கொண்டு வரமுடியும்.

விரும்பியபடியே ஆகுங்கள்

முன்னணி கடிகார விற்பனை நிறுவனமான டைட்டன், திருநங்கை ஒருவர்  தன்னை ஒப்பனை செய்துக் கொண்ட பின், ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும்  கடிகாரங்கள் இருப்பதைப் பார்வையிட்டு, அதில் பெண்கள் அணியும் கடிகாரத்தை தேர்ந்தெடுப்பது போன்று வடிவமைத்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. What You Feel Is Who You Are என்ற பெயரில் வெளியான இந்த விளம்பரம் #proudtobeme என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடப்பட்டது. அதாவது “ஒருவர் தான் யாராக இருக்க விரும்புகிறாரோ அவராகவே இருக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தும் விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றது.

அன்பைச் சொல்ல ஆண்தான் வேண்டுமா?

1994ஆம் ஆண்டு  பிரதான சாக்லேட் நிறுவனமான கேட்பரிஸ் விளம்பரத்தில் தனது காதலன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் , விளையாட்டின் நெருக்கடியான  நேரத்தில் காதலன் சரியாக செயல்பட்டதும், மகிழ்ச்சியின் உச்சத்தில் தன்னை மறந்து, கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் பாதுகாப்பைத் தாண்டி, உள்ளே குதித்து தன்னிச்சையாய் நடனம் ஆடுவார் . அப்போது  வாழ்க்கையில் என்னவொரு சுவை என்று  கருத்தோடு காட்பரிஸ்  விளம்பரம் நிறைவடையும்.

அதே நிறுவனம் 27 வருடங்களுக்கு பிறகு பெண்கள் கிரிக்கெட்டில் சாதிப்பதை முன்வைத்து  தனது காதலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் காதலன் , விளையாட்டின் நெருக்கடியான  நேரத்தில் காதலி சரியாக பந்தை கையாண்டு பேட்டிங் செய்ததை பார்த்துவிட்டு, மகிழ்ச்சியின் உச்சத்தில் தன்னை மறந்து, கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் பாதுகாப்பைத் தாண்டி, உள்ளே குதித்து தன்னிச்சையாய் நடனம் ஆடுவது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

27 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டில் பெண்களின் மாற்றங்களை #goodluckgirls  என்ற ஹேஷ்டேக்கோடு பதிவிடப்பட்டது.

விளம்பர யுக்தியோடு  காட்பரிஸ் நிறுவனம் பயன்படுத்தியது சமூக மாற்றத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்ததால் பெரும் பாராட்டை அந்த விளம்பரம் பெற்றது.

புதிய மாற்றத்திற்கான விளம்பரங்கள்

United Colors of Benetton  என்னும் ஆடை தயாரிப்பு நிறுவனம் தயாரித்த #UnitedByHalf என்ற ஹேஷ்டேக்கை முன்வைத்து விளம்பரம் ஒன்றை தயாரித்திருந்தது. இந்த உலகில் உள்ள அனைத்திலும் பெண்களுக்கு சரிபாதி உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தி ஆண் -பெண் பாலின சமத்துவத்தை முன் வைத்ததோடு ஆணுக்கு நிகராக சரிவிகித ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது .

ஒட்டுமொத்தத்தில் அந்த சம உரிமை, சம வாய்ப்பு , சம ஊதியம் என்பதை முன்னிறுத்தி அந்த விளம்பரத்தை முன் வைத்தது  மாற்றத்திற்கான ஒன்று .

எங்களுக்கு யாருமில்லை! நாங்களே துணை!!

மதம் மற்றும் கலாச்சார ரீதியான விளம்பரங்களால் பாதிக்கப்படுவதாக கூறப்படுவோர், அந்த விற்பனை பொருளை தடை செய்ய வேண்டும் என்று பரப்புரை செய்வதையும், வழக்கு தொடர்வதையும் பார்த்திருக்கிறோம். பெண்களை இழிவாக பேசும் விளம்பரங்களை தடை செய்யவோ, அந்த விளம்பர ஒலி மற்றும் ஒளிபரப்பை தடுத்து நிறுத்தவோ பெண்ணிய அமைப்புகளே தான் போராட வேண்டிய நிலை உள்ளது.

பல கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும்  விளம்பர உலகம் நினைத்தால் மேலே குறிப்பிட்ட இந்த விளம்பரங்கள் போல், புதிய சமூக மாற்றத்திற்கான எண்ணங்களை விதைக்கும் விளம்பரங்களை எடுக்க முன்வர வேண்டியது அவசியம்.

ஏனெனில் இத்தகைய மாற்றங்கள் மட்டுமே  பெண்களின் வாழ்வியலை மேம்படுத்தும்.

– சுகிதா சாரங்கராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் அமைக்க கோரிக்கை

G SaravanaKumar

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் – முதலமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்

Web Editor

தொலைக்காட்சிகளில் முகத்தை மறைத்து செய்தி வாசித்த பெண்கள்!

EZHILARASAN D