இந்தியாவில் சுமார் 85 சதவீதம் உழைக்கும் பெண்கள் பாலினம் வேறுபாட்டால் ஊதிய உயர்வு, பதவிஉயர்வு ஆகியவற்றில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக லிங்க்ட் இன் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.
லிங்க்ட் இன் (LinkedIn) நிறுவனம் கடந்த ஜனவரி 26-31ஆம் தேதிவரை உலகில் இருக்கும் சில முக்கிய நாடுகளில் தொழில்துறையில் பெண்கள் முன்னேற்றம் குறித்த ஆய்வை நடத்தியது.
அதில் இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலேயா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேலான ஆண், பெண் இருவரிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் மட்டும் 2 ஆயிரத்து 285 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. ஆண்கள் 1, 223 பேரும் பெண்கள் 1,053 பேரும் கலந்து கொண்டனர். பணியிடங்களில் ஆணுக்கும் பெணுக்கும் வேலை தளங்களில் அளிக்கப்படும் பொறுப்புகள், பாலின பாகுபாடு, ஊதியத்தில் சமத்துவமின்மை ஆகியவற்றை குறித்து கேள்விகள் கேட்டகப்பட்டது.
சுமார் 85 சதவீதம் வேலை செய்யும் பெண்கள் பாலினம் வேறுபாட்டால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவிஉயர்வு ஆகியவற்றில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தனர். கிட்டதட்ட நான்கில் ஐந்து பெண்கள் பணியிடங்களில் மூக்கிய வாய்ப்புகள் கிடைக்காமல் போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 66 சதவீதம் பேர், பாலினம் சமத்துவம் மேம்பட்டிருப்பதாக தெரிவித்தனர். ஆனால் 63 சதவீதம் பேர் தெரிவிக்கையில், திருமணமான பெண்கள், குழந்தை உள்ள தாய்மார்கள் ஆகியோர் தங்களின் குடும்ப பொறுப்புகள் காரணம்காட்டி பணியிடங்களில் பாகுபாடு காட்டப்படுவதாக ஆய்வின் முடிவில் கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் பணியிடங்களில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், தங்களுக்கு சாதகமான ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக பெண்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதேபோல் ஆண்களை ஒப்பிடுகையில் பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கல் மற்றும் பணியிடங்களில் வாய்ப்புகள் குறைந்து வழங்கப்படுவதாக 21 சதவீதம் ஆண்களும் 37 சதவீதம் பெண்களும் கூறியுள்ளனர்.
கடுமையாக உழைத்து வாழ்க்கையில் அடுத்தக்கட்ட இடத்திற்கு செல்வதற்கு பாலினம் முக்கியமாக சமூகத்தில் பார்க்கப்படுவதாக 63 சதவீதம் பெண்களும் 54 சதவீதம் ஆண்களும் தெரிவித்திருக்கின்றனர்.







