பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் ”பாலின சமத்துவ பேரணி” நடைபெற்றது.
பாலின சமத்துவ நடை என்ற தலைப்பில் சிபிஎம் கட்சி சார்பில் ஆண்களைப் போன்று பெண்கள் மற்றும் திருநங்கைகள் இரவில் சுதந்திரமாக நடமாட வேண்டும் எனவும், அவர்களுக்கான உரிமைகள் கொடுக்க வேண்டும் எனவும் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியானது சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில்,நடைபெற்ற இந்தப் பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, நடிகை ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் பேரணி அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையில் உறுதி மொழி ஏற்புடன் நிறைவுபெற்றது. இதில் பெண்கள் திருநங்கைகள் ஆண்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியில் பெண்கள் பறை இசைத்து, கோஷமிட்டு, ஆட்டம், பாட்டத்துடன் நடனம் ஆடி அவர்களது உரிமையை வெளிப்படுத்தினர்.
இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ரோகிணி, மக்களிடையே பாலின சமத்துவத்தை அதிகமாகக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனவும், பெண்கள் இரவில் தனியாக நடப்பதற்கான சூழல் இங்கு இல்லை எனவும், தனியாக நடந்து வருவதற்கான சூழல் ஏற்பட வேண்டும் என்பதுதான் இந்தப் பேரணியின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். பாலின சமத்துவத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டு தான் உள்ளோம் ஆனால் அதனை நாம் இன்னும் எட்டவே இல்லை அதனை எட்டுவதற்கான பேரணிதான் இதுவெனவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், பெண்ணுரிமைக்காக வலுவாகக் குரல் கொடுத்த தந்தை பெரியார் சிலையில் தொடங்கி உழைப்பாளர் சிலை வரை வந்து பெண்ணுரிமைக்காக உறுதிமொழி ஏற்கிறோம் எனவும் இதன் முக்கியமான நோக்கம் பாலின சமத்துவம் எனவும் தெரிவித்தார். பெண்கள் இரவில் தனியாகச் செல்லக்கூடாது எனச் சொல்லக்கூடிய உலகில் இந்த இரவும் எமக்கானது எனச் சொல்லும் பேரணி தான் இது எனத் தெரிவித்தார். மேலும் இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றது பெண் விடுதலைக்கான போராட்டத்திலே முக்கியமான அம்சம் எனவும் பாலின சமத்துவத்திற்கு ஆண்கள் பெண்கள் இருவரும் இணைந்து போராட வேண்டும் எனவும் பேசினார். அதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலின சமத்துவத்திற்கான இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.







