பேருந்துகளில் விளம்பர திட்டங்கள் – வருவாயை பெருக்க அரசு முடிவு

பேருந்துகளில் இருக்கைகளுக்கு பின்புறம் மற்றும் பயணிகள் வெளிநோக்கு கண்ணாடிகளில் விளம்பரங்கள் செய்ய அனுமதித்து வருவாயை பெருக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.   தமிழ்நாடு போக்குவரத்து துறை மக்களுக்கு நிறைவான பயணத்தை வழங்க பல்வேறு…

பேருந்துகளில் இருக்கைகளுக்கு பின்புறம் மற்றும் பயணிகள் வெளிநோக்கு கண்ணாடிகளில் விளம்பரங்கள் செய்ய அனுமதித்து வருவாயை பெருக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.

 

தமிழ்நாடு போக்குவரத்து துறை மக்களுக்கு நிறைவான பயணத்தை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து துறை மூலம் அரசுக்கு வருவாயை பெருக்குவதற்கான கருத்துக்களை பெற்று நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

 

பேருந்து இயக்கத்தில் பயணக் கட்டண வருவாயை தவிர பிற வழிகளில், அதாவது விளம்பரம், தூதஞ்சல், பார்சல் சேவை மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து எவ்வாறு வருவாயை பெருக்க வேண்டும் ஆலோசித்து வருகிறது. அதன்படி சமீபத்தில் அரசு பேருந்துகளில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி வழங்கியது. சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் முதல் கட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

 

இந்நிலையில், பேருந்துகளில் விளம்பரங்கள் செய்ய அனுமதிப்பதன் மூலம் லாபம் இல்லாமல் இயங்கும் போக்குவரத்து கழகங்களில் வருவாய் ஈட்ட முடியும் என முடிவு எடுத்துள்ளது. பேருந்துகளில் பல்வேறு வகையான விளம்பரங்களை வெளியிட வைத்து வருவாயை ஈட்ட திட்டமிட்டுள்ளது. பேருந்துகளில் பயணிகளின் இருக்கைக்கு பின்புறம் காலியாக உள்ள இடங்களில் விளம்பரங்களுக்கு அனுமதி அளிப்பது.

ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் விளம்பரம், பயணிகளின் வெளிநோக்கு கண்ணாடிகளில் விளம்பரங்கள் மற்றும் பேருந்துகளில் புவித்திசை காட்டி மூலம் அடுத்து இறங்க வேண்டிய இடம் குறித்து அறிவிப்பு செய்யும்போது ஒலி வடிவிலான விளம்பரங்கள், LED Scrolling Board மூலம் விளம்பரம், வெளிப்புற கூண்டு தகட்டில் விளம்பரங்கள் செய்ய அனுமதி அளிப்பதன் மூலம் அரசுக்கு வருவாயை பெருக்க முடியும் என முடிவு எடுத்து நடைமுறை படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.