எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு : பாஜக அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்………!

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை முன்கூட்டியே கணித்து முன்னேற்பாடுகளை செய்யத் தவறிய பாஜக அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது :

நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தினசரி வாழ்க்கையில் அத்தியாவசியமான சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது மிகுந்த கவலைக்குரியது.

இதனால் உணவகங்கள், சிறு ஹோட்டல்கள் மற்றும் பல சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்த்தப்பட்டதும், முன்பதிவு காலம் 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டதும் பொதுமக்கள் மீது கூடுதல் சுமையாக மாறியுள்ளது. அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயுவில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள்மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலையால் கத்தார், ஈரான் போன்ற நாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளை முன்கூட்டியே கணித்து மாற்று ஏற்பாடுகளை முறையாக செய்யாமல் அலட்சியமாக இருந்த ஒன்றிய பா.ஜ.க.அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, பொதுமக்கள் மற்றும் சிறு தொழில்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை உடனடியாக சீரமைத்து தட்டுப்பாட்டை நீக்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் உருவாகாத வகையில் நிலையான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.