இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று (நவம்பர் 21) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நவம்பர் 2026 மாத தொடக்கம் முதலே தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழையே பெய்து வருகிறது. வங்கக்கடலில் இதுவரை 3 புயல்கள் உருவான நிலையிலும் அதனால் தமிழகத்திற்கு மழைப்பொழிவு போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை.

வலுவிழந்த ‘அக்வான்’ புயல்!

கடந்த 19-11-2026 அன்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘அக்வான்’ (Akvan) தீவிர புயல், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (நவம்பர் 20) அதிகாலை 02:30 மணியளவில் புயலாக வலுவிழந்தது.

தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்த இந்தப் புயல், காலை 07:30 மணி முதல் 08:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் கோபால்பூருக்கு அருகே கரையைக் கடந்தது.

இதையடுத்து வடக்கு – வடகிழக்கு திசையில் நகரும் இந்தப் புயல், அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்!

இன்று (நவம்பர் 21) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.