டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் கங்குலி, விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
16வது ஐபிஎல் தொடர் கடந்த 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் 28ம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இந்த கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி வெற்றி பெற்ற நிலையில், போட்டியின் முடிவில் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கி கொள்ளும்போது விராட் கோலியிடம் கைக்குலுக்குவதை சவுரவ் கங்குலி தவிர்த்துவிட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பிசிசிஐ தலைவராக இருந்தபோதே கங்குலிக்கும் விராட் கோலிக்கும் ஒத்துப்போகவில்லை. இதனால், இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக விராட் கோலி நீக்கப்பட்டார். இதற்கு முழு காரணம் கங்குலி தான் என பரவலாக கிரிக்கெட் பேசப்பட்டது. அந்த பிரச்சனை இன்னும் இருவருக்கும் இடையே சமரசமாகவில்லை. அதன் வெளிப்பாட்டை டெல்லி – பெங்களூரு போட்டியின் போதும் கங்குலி மற்றும் விராட் முகத்தில் பார்க்க முடிந்தது.







