திண்டுக்கல் அருகே காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவி நீட்டிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணை வேந்தராக குர்மித்சிங் உள்ளாா் மற்றும் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக சிவக்குமார் பணியாற்றி வரும் நிலையில் அவாின் பதவிக்காலம் கடந்த 9 -10 -2022-ம் தேதியுடன் முடிவடைந்தது. பின்னர் ஆறு மாத காலம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு தொடர்ந்து பணியாற்றி இருந்தார். தற்போது இவருடைய பதவி காலம் 9-ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பல்கலைக்கழக துணைவேந்தர், மீண்டும் மூன்று மாத காலம் சிவகுமாரின் பதவிக்காலத்தை நீடித்தாா்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கடந்த முறை மத்திய அரசின் தணிக்கை துறை ஆய்வின் மூலம் தகுதியற்ற நபருக்கு பதிவாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் தற்போது வரை இவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.
1 வாரத்திற்குள் பதிவாளரின் பதவி நீடிப்பை ரத்து செய்யாவிட்டால் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்புடன் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க தலைவர் ராஜா கூறினார்.
—-ரூபி.காமராஜ்







