தமிழக சட்டப்பேரவையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனிடையே, அமைச்சர் ராஜ்மோகன் கலை பண்பாட்டுத் துறை சார்ந்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, “மண்ணின் கலைகளை மரபு மாறாமல் மேம்படுத்திடும் வகையில், கலை ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அதிகரிப்பு: 58 வயது நிறைவடைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ.3,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத் துறையின் பல்வேறு கட்டிடப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துறையின் கட்டிடப் பராமரிப்புக்காக வழங்கப்பட்டு வரும் நிதியும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை, அணிகலன்கள் வாங்குவதற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.10,000 நிதியுதவி அதிகபட்சமாக ரூ.20,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம் மேலும் 500 இளம் கலைஞர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். கலை பண்பாட்டுத் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவன வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், இத்துறையின் இணையதளம் மேம்படுத்தப்படும். கலை பண்பாட்டுத் துறையின் கீழ் ரூ.20,000 ஊதியத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு 50 கலையாசிரியர்கள் மூலம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து கலைப் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகள், மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் மாணாக்கர்கள் பயன்பாட்டில் உள்ள இசைக் கருவிகளைப் பழுது நீக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அவர் அறிவித்தார்.




