இந்தி எதிர்ப்பு முதல் மேகதாது வரை: விசிக நிறைவேற்றிய 6 தீர்மானங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான புரட்சியாளர் அம்பேத்கர் திடலில் நேற்று (13.11.2026) வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு மாநிலப் பொறுப்பாளர் கலந்தாய்வுக் கூட்டத்தில், இந்தி எதிர்ப்பு முதல் மேகதாது வரை 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானங்கள்:

  1. நீதிபதி குரியன் ஜோசப் ஆணையத்தைக் கலைத்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்!

இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றுக்கிடையிலான உறவுகளை சீராய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் அவர்களின் தலைமையிலான உயர்நிலைக்குழு அண்மையில் கலைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தக் குழுவுக்குச் சட்ட அதிகாரம் இல்லை. சட்ட ஆணையத்தின் பணிகளையே அதுவும் செய்வதாக இருக்கிறது என அதற்குச் சொல்லப்பட்டிருக்கும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஒன்றிய அரசிலும் சட்ட ஆணையம் உள்ளது. ஆனாலும் மைய மாநில உறவுகளை ஆராயும் பணி சட்ட ஆணையத்திடம் கொடுக்கப்பட்டதில்லை.

சர்க்காரியா கமிஷன், பூஞ்சி கமிஷன் போன்றவற்றிடம்தான் ஒப்படைக்கப்பட்டன. நீதிபதி குரியன் ஜோசப் ஆணையத்தைக் கலைக்கக்கூடாது என்று ஏற்கனவே விசிக சார்பில் அறிக்கை வெளியிட்டிருந்தோம். இதே கருத்தைச் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்திலேயே கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது உரையில் வலியுறுத்தியுள்ளார். நீதிபதி குரியன் ஜோசப் ஆணையத்தின் அறிக்கையின் முதல் பகுதியே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆவணமாகத் திகழ்கிறது. அதன் இறுதி அறிக்கை ஒன்றிய மாநில உறவுகள் குறித்து மிக முக்கியமானப் பரிந்துரைகளை முன்வைக்கும் என்ற நம்பிக்கையை அது தந்துள்ளது. இறுதி அறிக்கை நிறைவு செய்யப்படும் நிலையில் இருக்கும்போது இந்த அவசர முடிவு ஏன் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட ஆணையம் இந்தப் பணிகளைத் தொடர்வது சாத்தியமில்லை. எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

  1. தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டும்!

தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுவப்படும் மைல் கற்களில் இந்தி மொழி கட்டாயமாக இடம்பெற்று வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 1988 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க தேவையான நிதி ஒன்றிய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வழங்கப்பட்டு. தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways Division) என்கிற அலகின் மூலம் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில அரசாலேயே பராமரிக்கப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய சட்டம் 1968ல் இயற்றப்பட்ட பின் இந்த நிலை மாறியது. தமிழ்நாட்டின் 6807 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைத் துறை சாலைகளில் வெறும் 798 கி.மீ. நீள சாலைகள் மட்டும் மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 6009 கி.மீ. நீள சாலைகள் ஒன்றிய அரசின்

இந்திய தேசீய நெடுஞ்சாலை ஆணைய (NHAI – National Highways Authority Of India) கட்டுபாட்டிற்கு சென்றுவிட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NTAT) நாடு முழுவதும் தனது கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கல் மற்றும் வழிகாட்டு பலகைகளில் மும்மொழி கொள்கையினை நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் ‘தமிழ் இந்தி ஆங்கிலம்’ என்ற வரிசையில் இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மூன்று மொழிகளில் வழிகாட்டு பலகைகளிலும், மைல்கற்களிலும் எழுத இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முற்பட்ட போது எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), தற்போது தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் எல்லை கற்கள் நடும் பணி மற்றும் பழைய எல்லை கற்களில் வாசகங்களை புதுப்பிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தஞ்சாவூர் சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் தமிழ் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தியிலும் ஊர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மீதான நேரடித் தாக்குதலாகும்.

இந்தியாவின் அலுவல் மொழியாக (Official Language) ஆங்கிலத்தோடு இந்தியை அரசமைப்பு சட்ட பிரிவு 343 சொல்லும் அதே வேளை, ஒரு மாநில அரசு இந்தி அல்லாத மாநிலத்தின் மொழியினை இந்திக்கு பதிலாக அலுவல் மொழியாக செயல்படுத்தும் உரிமையினை பிரிவு 345 மூலம் வழங்குகிறது. இந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்நாடு அலுவல் மொழி சட்டம் 1956 (Tamil Nadu Official Language Act, 1956) தமிழ்நாட்டின் அலுவல் மொழிகளாக தமிழும் ஆங்கிலமும் என இருமொழி கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மைல்கற்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கெனவே பொறிக்கப்பட்டுள்ள இந்தி எழுத்துகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு தமிழக அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

  1. 245 டாஸ்மாக் தொழிலாளர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்!

2003ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மது விற்பனையினை அரசே செய்யும் என்கிற கொள்கை முடிவை எடுத்த பின் அதனை செயல்படுத்தும் பொறுப்பை டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இந்த பணிக்கு தற்கலிமாக ஆட்கள் தேர்வு நடைபெற்றபோது, மது விற்பனை என்பதால் பெரிதாக யாரும் முன்வரவில்லை. சமூகத்தின் கடைநிலையில் உள்ள பெரும்பான்மையாகவுள்ள ஒடுக்கப்பட்ட மக்களும், அதனையடுத்து பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தான் இந்த பணியில் சேர்ந்தனர். டாஸ்மாக்கில் பணியாற்றும் சுமார் 23,000 தொழிலாளர்கள் கடந்த 23 ஆண்டுகளாக தங்களது உரிமைகளை முன்னிறுத்தி போராடி வருகின்றனர்.

விற்பனை செய்யும் மதுவை அருந்திய பின் காலியாகும் பாட்டிலை பெறும் பணி தொடர்பான சிக்கலை முன்னிறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு போராடினார்கள். இதனால் 245 டாஸ்மாக் தொழிலாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது. தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 245 டாஸ்மாக் தொழிலாளர்கள், அந்தச் சூழலிலும் பணிக்குத் திரும்பி தொடர்து பணியாற்றி வருகிறார்கள். எனவே, அவர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை அரசு முழுமையாக ரத்து செய்து அவர்களை வழக்கம்போல் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், டாஸ்மாக் தொடர்பாக ஏதேனும் குற்றச் செயல்கள் நடைபெற்றிருந்தால் அதற்குக் காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

  1. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்!

அரசியல் நோக்கத்திற்காக கர்நாடக அரசியல் தலைவர்கள் மேகதாது அணை குறித்து பேசி வருகிறார்கள் என்றாலும், தமிழக அரசு மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும். தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்றாலும், தற்போது கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசும் அதற்கேற்ப தீவிரமாகச் செயல்பட்டு உரிய வகையில் ஒன்றிய அரசின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்று அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

  1. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு!

தமிழ்நாடு முழுவதும் பப்ளிக் பிராசிகியூட்டர், கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர். அரசுப் பிளீடர் மற்றும் கூடுதல் அரசுப் பிளீடர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நியமனங்களில் சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டு முறை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் உரிய கவனம் செலுத்தி அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  1. அனைத்து பொதுநூலகங்களிலும் இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட நூல்களை ஆய்வு செய்ய வேண்டும்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களில் வரலாற்றுப் பிழைகள் நிறைந்த நூல்கள் கொள்முதல் செய்யப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதாகத் தெரிகிறது. கோவை ‘பெரியார் அறிவுலகம் நூலகம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள பொது நூலகங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் வரலாற்றுப் பிழைகள் உள்ள நூல்களை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், அவற்றைக் கொள்முதல் செய்த அதிகாரிகள் மற்றும் பதிப்பகத்தார் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.